Wednesday, 01 July 2026, 12:58 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

முதலமைச்சர் விஜய் குட்டி கதை கூறியதில் தவறொன்றும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

Published On: 2026-06-26 19:33:59 | Reporter: Admin

News Image

காஞ்சிபுரம்: முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் குட்டி கதை கூறியதில் தவறு ஒன்றுமில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள கிழம்பி பகுதியில் இயங்கி வரும் எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டைக் கடந்த வெள்ளி விழா இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவின் மற்றுமொரு பகுதியாக 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. இதனை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், முன்னிலையில மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதற்கு பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது. அரசியல் விமர்சனத்தை சட்டசபையில் செய்யாமல் வேறு எங்கு செய்வது? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் பதில் சொல்லட்டும். முதலமைச்சர் விஜய் குட்டி கதை கூறியதில் தவறு ஒன்றுமில்லை" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து நிதியும் கொடுக்கப்பட்டுவிட்டது. தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு கூட மத்திய அரசால் பெரிய திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்னரும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி கட்டாயமாக வழங்கப்படும். மத்திய அரசு மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை உடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு கோரிக்கை வைத்தால் எல்லா மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசு அதன் ஜிடிபி (GDP) அளவில் இருந்து 3 சதவீதம் கடன் பெறலாம். அதேபோல், ஒரு மாநிலம் கடன் வாங்கினால் அம்மாநிலத்தின் பொது சொத்து உயர வேண்டும். அதாவது பள்ளி, மருத்துவமனை, தொழில்நுட்ப பூங்கா போன்றவற்றின் எண்ணிக்கை உயர வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும். அத்துடன், படிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதேபோல், புதிய தொழில் வளரும் இடங்களைச் சுற்றி பொருளாதாரமும் வளர்ச்சியடையும். ஆனால், இங்கு கடன் வாங்கி பொதுமக்களுக்கு நேரடியாக பணமாக வழங்கப்படுகிறது. இதை ஏற்கெனவே அதிக கடனை வைத்துக் கொண்டு செய்யக்கூடாது" என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7