Wednesday, 01 July 2026, 12:58 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு இடங்களில் வேலை - தமிழக அரசு ஏற்பாடு

Published On: 2026-06-26 19:31:59 | Reporter: Admin

News Image

திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு தொழிற்சாலைகளில் அனைத்து வசதிகளுடன் வேலை வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அம்மோனிய வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு தங்கி பணியாற்றி வந்த 70-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் உயர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர, இத்தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மனநிலை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க தேவையான உளவியல் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தேவையான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இருப்பினும், சிலர் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பவில்லை எனவும், தங்களுக்கு உரிய சம்பளத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தி தரும் நோக்கில் தமிழ்நாடு அரசு அருகில் உள்ள தொழிற்சாலைகள் அவர்களை வேலையில் அமர்த்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, சில தனியார் தொழிற்சாலைகளை சேர்ந்தவர்கள் தங்கும் வசதி, மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நல்ல சம்பளத்தில் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக மண்டபத்தில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து அத்தொழிற்சாலை நிர்வாகத்தினரும் பேசி வருகின்றனர். இதுகுறித்து அவர்களை வேலைக்கு எடுக்க வந்த தனியார் தொழிற்சாலையை சேர்ந்த நபர் கூறுகையில், “வேலைக்கு திரும்ப விருப்பப்படுபவர்களை, நல்ல சம்பளத்துடன் வேலைக்கு எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்து தருவோம் என கூறியுள்ளோம். விருப்பமுள்ளவர்களை பணிக்கு எடுத்துகொள்கிறோம்” என தெரிவித்தார். அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கையில், “தமிழ்நாடு அரசு எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. நாங்கள் இங்கு நலமுடன் உள்ளோம். எங்களுக்கான வேலைக்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்று கூறினார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7