Wednesday, 01 July 2026, 12:57 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு - ரூ.9.67 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

Published On: 2026-06-26 19:30:59 | Reporter: Admin

News Image

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தி ரூ.9.67 கோடி சொத்துகளை முடக்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர்கள் பணி யிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதிய நிலையில், 2017-ஆம் ஆண்டே முடிவுகள் வெளியாகின. ஆனால், இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு நபர்கள் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர். தேர்வு வாரியத்தின் உறுப்பினரான உமா என்பவர், இந்த குளறுபடி தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இடைத்தரகர்கள், பள்ளிக் கல்வித்துறை சங்கத்தினர் என 156 பேர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மேலும், இடைத்தரகர்கள், டேட்டா என்ட்ரி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள், சங்கத்தை சேர்ந்தவர்கள் என 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 9 பேர் மீதும் குண்டர் சட்டமும் போடப்பட்டது. விரிவுரையாளர் பணிக்காக பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி நடைபெற்றது விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதாவது நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை கடந்த இரு தினங்களாக சென்னை மண்டல அலுவலகம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் 21 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், ரூ.9.67 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை காவல் துறை, மத்திய குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டம்-2002-இன் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோது குற்றச்சாட்டுக்கு உட்பட்ட வர்கள், சில தேர்வர்களின் மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் மாற்றி உயர்த்தியது தெரியவந்தது. அதே தேர்வர்களின் பெயர்களுடன் கூடுதலாக 385 ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதன் மூலம் தகுதியற்ற 262 பேர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வழக்கில் முதல் குற்றபத்திரிகை 2021-ஆம் ஆண்டிலும், இரண்டாவது குற்றப்பத்திரிகை 2023-ஆம் ஆண்டிலும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர், தங்கள் கூட்டாளிகளான சுரேஷ் பால் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களின் உதவியுடன் திட்டமிட்டு முறைகேடு செய்தது தெரியவந்தது. மேலும், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் தேர்வர்களிடம் இருந்து 14 லட்ச ரூபாய் முதல் 16 லட்ச ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதும், அந்த பணம் பல நிறுவனங்கள் மற்றும் போலி கணக்குகள் வழியாக மாற்றப்பட்டு, பின்னர், நிலம் மற்றும் நகைகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக நடத்திய சோதனையின்போது பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், பல்வேறு அரசு தேர்வுகளின் ஓஎம்ஆர் தாள்களின் நகல்கள், தேர்வர்களின் சான்றிதழ்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 56 வங்கி கணக்குகள் மற்றும் இரண்டு டீமேட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கு உட்பட்டோர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பெயரில் உள்ள 36 அசையா சொத்துக்களுக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முடக்கப்பட்டுள்ள இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.9.67 கோடி. அதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும். இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7