Wednesday, 01 July 2026, 12:58 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ. 40 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கின

Published On: 2026-06-26 19:27:59 | Reporter: Admin

News Image

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு இல்லம் உட்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ. வேலு இருந்தபோது சாலை விரிவாக்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் எ.வ. வேலு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று (ஜூன் 25) திடீர் சோதனை நடத்தினர். எ.வ. வேலுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை இல்லம், திருவண்ணாமலை இல்லம் உள்ளிட்டவற்றில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 40 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டில் கரூர் மற்றும் இதர மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 7 கோடி மதிப்பான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 3.23 கோடி பணம் ஒப்பந்ததாரருக்கு அரசு சார்பில் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகவே இன்று காலை முதல் சென்னை திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்பு உடைய அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை தொடங்கிய சோதனை இன்று மாலை 7 மணி வரை நீடித்தது. இதில், வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள், குறிப்பாக, ஒப்பந்த கோப்புகள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் மின் ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் காட்டப்படாத ரூபாய் 40 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7