Wednesday, 01 July 2026, 12:57 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 19:22:59 | Reporter: Admin
புது டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டைச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை நரேந்திர மோடி அவரின் எக்ஸ் பக்க பதிவின் வாயிலாக பகிர்ந்துள்ளார். இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மிக மிக நெருக்கமாக உள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் 'இந்திய மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் அறக்கட்டளை' (FIIDS) சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்ட அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை உதவிச் செயலாளர் பெத்தானி பவுலோஸ் மோரிசன் கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி-யும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியாவில் அமேசானின் எதிர்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடன் சந்திப்பு நடைபெற்றது. அவருடனான இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமேசான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என பலவற்றுக்கு சேவை வழங்கி வருகிறது. இது ஒரு தொடக்கம் தான். வரும் ஐந்து ஆண்டுகளில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டை இந்தியாவில் அமேசான் செய்ய உள்ளது. இதில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்கான முதலீடும் அடங்கும். இந்த பிரிவில் மட்டும் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 3.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதியை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர, 15 மில்லியன் சிறு வணிகதாரர்களுக்கும், 4 மில்லியன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவின் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலம் குறித்து உற்சாகமாக உள்ளேன்" என கூறியுள்ளார். அமேசான் சிஇஓ-வின் இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, "ஆண்டி ஜாஸ்ஸி உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ள 48 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வரவேற்கிறேன். இதன் மூலம் நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அதே வேளையில், இந்தியாவில் முதலீடு செய்ய உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது" என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.