Wednesday, 01 July 2026, 02:09 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

FIFA WC: வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா.. தென் கொரியாவை 1-0 என வீழ்த்தி சாதனை வெற்றி

Published On: 2026-06-26 19:13:00 | Reporter: Admin

News Image

லண்டன்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில், தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி, உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் இந்த சாதனைப் பயணம் அத்தனை எளிதாக அமையவில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை விசா தாமதம் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் அந்த அணி போட்டியில் பங்கேற்பதே கேள்விக்குறியாக இருந்தது. பின்னர் முதல் போட்டியில் மெக்சிகோவிடம் தோற்றதோடு, அந்த அணியின் ஸ்பெபெலோ சித்தோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோர் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு முதல் போட்டியிலேயே தகர்ந்துவிடும் என்று பலரும் கருதினர். ஆனால், மனம் தளராத தென்னாப்பிரிக்கா அணி செக் குடியரசுக்கு எதிரான இரண்டாவது போட்டியை 1-1 என டிரா செய்து தனது வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து, தென் கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா சாவா லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் கொரியா கொடுத்த கடுமையான அழுத்தத்தை திறம்பட சமாளித்த தென்னாப்பிரிக்கா, பின்னர் பதில் தாக்குதல்களைத் தொடுத்தது. ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் தபெலோ மாசெகோ, தென் கொரியாவின் தற்காப்பு அரணை உடைத்து பந்தை கால்களுக்கு இடையே செலுத்தி அபாரமாக கோல் அடித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. தென் கொரியாவின் நட்சத்திர வீரர் சன் ஹியுங்-மின் இரண்டாவது பாதியில் களம் இறங்கிய போதிலும் அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கடைசி கட்டத்தில் 6 தற்காப்பு வீரர்களுடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா, கொரியாவின் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7