Wednesday, 01 July 2026, 02:10 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

குழந்தையின் உடல் எடையை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களா? சர்வதேச ஆய்வில் தகவல்!

Published On: 2026-06-26 18:53:02 | Reporter: Admin

News Image

ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் குண்டாக இருந்தால் பிள்ளைகளும் குண்டாகவும், ஒல்லியாக இருந்தால் பிள்ளைகளும் ஒல்லியாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு குழந்தை அதிக எடையுடன் இருந்தால், 'அம்மா கர்ப்பமாக இருந்த போது சரியாக சாப்பிடவில்லை' என்றோ அல்லது 'அளவுக்கு அதிகமாகச் சாப்பாடு ஊட்டுகிறார்கள்' என்றோ வளர்ப்பு முறையைத்தான் பலரும் குறை சொல்கிறார்கள். இப்படியிருக்க, உடல் பருமன் என்பது வளர்ப்பு முறையால் வருகிறதா அல்லது பரம்பரையாக வருகிறதா என்ற கேள்வி நமக்குள்ளே நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு விடை தேடும் வகையில் பிரிஸ்டல், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நார்வே நாட்டின் பொது சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு புதிய சர்வதேச ஆராய்ச்சியை நடத்தியுள்ளன. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், பெற்றோரின் உடல் எடைக்கும் குழந்தைகளின் உடல் எடைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நாம் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. மரபணுக்களின் வழியே கடத்தப்படும் உடல் பருமன் நமது உடல் எடையின் அளவானது (BMI), பெற்றோரிடம் இருந்து நமக்கு கடத்தப்படும் மரபணுக்களால் (Genes) தான் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது, ஒரு தாயோ அல்லது தந்தையோ அதிக உடல் எடையுடன் இருக்கும்போது, அவர்களின் குழந்தைகளும் அதேபோல் அதிக எடையுடன் வளர்வதற்கு 79 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை அவர்களின் மரபணுக்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் தாயின் உடல் எடை அதிகமாக இருந்தால், அது குழந்தை பிறக்கும் போது அதன் எடையில் வேண்டுமானால் மாற்றத்தை ஏற்படுத்தலாமே தவிர, அந்த குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு ஏற்படும் உடல் பருமனுக்கு தாயின் கர்ப்பகால எடை காரணம் அல்ல என்று இந்த ஆய்வு தெளிவுப்படுத்துகிறது. குழந்தை பிறந்து இரண்டு வயதை கடந்த பின்னர், எட்டு வயது வரை தாயின் மரபணுக்களும் தந்தையின் மரபணுக்களும் சமமான அளவிலேயே குழந்தையின் உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துல்லியமான முடிவை கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் நார்வே நாட்டில் பிறந்த சுமார் 86,000 குழந்தைகளின் தரவுகளை பரிசோதித்தனர். இதில் குழந்தைகளின் பிறப்பு எடை மற்றும் அவர்கள் பிறந்தது முதல் எட்டு வயது வரையிலான உடல் எடை மாற்றங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வில் ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் எனப் பல தலைமுறையினரின் குடும்ப உறவுகள் ஒப்பிடப்பட்டன. ஆராய்ச்சி மாதிரிகளின்படி, ஒரு தாயின் உடல் எடைக்கும் அவரது குழந்தையின் உடல் எடைக்கும் இடையே உள்ள தொடர்பில் 79 சதவீதம் மரபணுக்களின் பங்களிப்பு மட்டுமே உள்ளது. அதுவே தந்தையை பொறுத்தவரை, இந்த தொடர்பு 94 சதவீதமாக இருக்கிறது. இதன் மூலம், வளர்ப்பு முறையோ அல்லது வெளிப்புற சூழலோ அல்லாமல், பரம்பரை பரம்பரையாக வரும் மரபணுக்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. அதிக உடல் எடை கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, உணவின் மீது அதிக ஈடுபாடு இருப்பதும், கவலை அல்லது மகிழ்ச்சி போன்ற நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தை பெற்று கொள்வதற்கு முன்பாக தங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள முயற்சிப்பது நல்லது என்றாலும், அது மட்டுமே அவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான எடையுடன் இருப்பதை முழுமையாக உறுதி செய்துவிட முடியாது. இந்த ஆராய்ச்சியின் முடிவு, வருங்காலத்தில் உடல் பருமனை தடுப்பதற்கான மருத்துவ முறைகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இனிமேல் வெறும் பெற்றோரின் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், மரபணு ரீதியாக உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே எப்படிப்பட்ட ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. அடிக்கடி யோகர்ட் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இத்தனை நன்மைகள் காத்திருக்கு! கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீரக தண்ணீர - தினமும் எவ்வளவு குடிக்கணும் தெரியுமா?

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7