Wednesday, 01 July 2026, 03:31 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 18:50:02 | Reporter: Admin
ஹைதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் கிளென் பிலிப்ஸ், மெட் ஹென்றி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 25) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிளென் பிலிப்ஸ் சதம் விளாசியும், மேட் ஹென்றி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவினார். அதிலும் குறிப்பாக மேட் ஹென்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த நிலையில் தான் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிலிப்ஸ் மற்றும் ஹென்றி ஆகியோருக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் மற்றும் பிளைர் டிக்னர் ஆகியோருக்கு நியூசிலாந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த ஆட்டத்தில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கும் இந்த போட்டியில் ஒய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பென் சியர்ஸ் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆகியோர் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளனர். நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): டாம் லேதம் (கேப்டன்), டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், பென் சியர்ஸ், வில்லியம் ஓ'ரூர்க் இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): பென் டக்கெட், எமிலியோ கே, ஜேக்கப் பெத்தல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.