Wednesday, 01 July 2026, 03:30 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

மின்வாரியத்தில் நஷ்டத்தை குறைக்க என்ன வழி? அறப்போர் இயக்கம் யோசனை

Published On: 2026-06-26 18:49:02 | Reporter: Admin

News Image

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பி, கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தை குறைக்க முடியும் என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் யோசனை தெரிவித்துள்ளார். அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்மோகனை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம் வெங்கடேசன், "எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திடீர் நகரில் வசித்து வரும் மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகில் காலியாக உள்ள அரசு நிலத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோல், புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் குடியிருப்பு திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஒப்பந்ததார் நிறுவனம் தரமற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.2,600 என்ற அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், கட்டுமானத்தில் தரம் குறைவான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கே.பி.பார்க் குடியிருப்பில் IIT Cube அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் கட்டுமான விதிமுறைகளை மீறி அதிக அளவில் மணல் பயன்படுத்தப்பட்டதாகவும், பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட மாதிரிகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தரச்சோதனையில் தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் சுவர்கள் உதிரும் நிலை, கட்டமைப்பு குறைபாடுகள், செயலிழந்த மின்தூக்கிகள், உள்ளிட்ட பிரச்சினைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். புதிய அரசு பதவியேற்று குறுகிய காலமே ஆன நிலையில், மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சிகளில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதையும், கமிஷன் வாங்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டிருப்பதையும் அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில், ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து டெண்டர்களும் கட்டாயமாக இ-டெண்டர் முறையில் நடத்தப்பட வேண்டும். லஞ்ச ஊழல்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துகளை முன்வைத்துள்ளோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது, டிரான்ஸ்பார்மர் மற்றும் கண்டக்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களை அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பி, கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தை குறைக்க முடியும். நாங்கள் அளித்துள்ள 40-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் மீது விரைந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். ராம்சார் பாதுகாப்பு எல்லைக்குள் வரும் பகுதியில், பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் மீது நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். திமுக சுற்றுச்சூழல் அணியைச் சேர்ந்த ஒருவரே இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7