Wednesday, 01 July 2026, 03:31 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

அன்பில் மகேஸ் ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

Published On: 2026-06-26 18:47:02 | Reporter: Admin

News Image

சென்னை: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கடரமணன், மரிய வில்சன், குமார் உள்ளிட்டோர் சென்னை மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித் துறையில் பல ஊழல்கள் நடந்துள்ளன என குற்றம் சாட்டி, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தைரியமாக நான் பணம் வாங்கவில்லை என்று கூறுவாரா? என கேள்வி எழுப்பினார். இது குறித்து பேசிய அவர், “திமுக மக்களுக்கான திட்டங்களை வகுத்த அளவுக்கு ஊழல்களுக்கும் திட்டமிட்டனர். அந்த ஊழல் திட்டங்களை தவெக ஒழித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையிலும் பல ஊழல்கள் நடந்துள்ளன. அன்பில் மகேஸ் பொய்யாமொழி தைரியமாக நான் பணம் வாங்கவில்லை என்று கூறுவாரா? எங்கள் முதலமைச்சர் நாங்கள் பணம் வாங்க மாட்டோம் என்று நேரடியாகவே அறிவிக்கிறார். அதற்கு காரணம் அவரிடம் உள்ள வெளிப்படைத்தன்மையும் தைரியமும் தான்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் வி.பி.சிங். தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் அவர் தான். தமிழ்நாட்டுடன் அவருக்கு தனித்துவமான அன்பும் உறவும் இருந்தது. வெறும் 11 மாதங்கள் ஆட்சியில் இருந்த அவர் 30 ஆண்டுகளுக்குச் சமமான சாதனைகளை நிகழ்த்தியவர். அவர் காட்டிய பாதையில், பல ஆண்டுகளாக திமுக செய்யத் தவறிய முக்கிய பணிகளில் ஒன்றான சமூகநீதி கணக்கெடுப்பை எங்கள் அரசு முன்னெடுத்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்று கூறப்படும் இந்த சமூக நீதி கணக்கெடுப்பை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் விஜய் தனது முதல் உரையிலேயே இதை அறிவித்தார். சமூக நீதிக்காக எந்த முன்னெடுப்பையும் திமுக அரசு செய்யவில்லை. வி.பி. சிங் கனவு கண்ட சமூக நீதியை நிலைநிறுத்தும் அரசாக தவெக அரசு செயல்படும். 75 ஆண்டுகள் பழமையான கட்சி என்று திமுக கூறுகிறது. சட்டப் பேரவையின் மாண்பு குறித்து அவர்கள் பேசுகின்றனர். ஆனால், முதல் நாளிலிருந்தே நாங்கள் அரசியல் மேடைகளிலும் சட்டப்பேரவையிலும் மாண்பை கடைபிடித்து வருகிறோம். திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம். நிர்வாகம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியை எதிரிக் கட்சியாக பார்க்கவில்லை. தவெக சமரச அரசியல் செய்கிறது என்று கூறுவது தவறு. எங்களின் கொள்கைகளையோ உரிமைகளையோ நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. முதல் நாளிலிருந்தே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேலி, கிண்டல் செய்து வந்தனர். முதலமைச்சர் பேச மாட்டாரா? இடியே தலையில் விழுந்தாலும் பேச மாட்டாரா? என்று விமர்சித்தனர். இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. நான் உண்மையாக இருக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன்’ என்று சொல்லக் கூடிய அரசால் மட்டுமே சட்டப்பேரவையை நேரலையில் ஒளிபரப்ப முடியும். அந்த தைரியத்தை எங்கள் தலைவர் காட்டியுள்ளார். இது மிகப் பெரிய வரலாறு. மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் சட்டப்பேரவை வந்துள்ளது. திருமாவளவன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. நல்ல கருத்துகளை நிச்சயமாக வரவேற்போம். ஆனால் நான்கு நாட்களாக நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை அவர் முழுமையாக பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அமைதியாக மரபு படி நடந்து கொள்கிறோம். திமுகவின் போலியான பிரசாரங்களுக்கு மட்டுமே பதிலளித்து வருகிறோம். பார்ட்டி பண்ட் என்று தான் முதலமைச்சர் கூறினார். திமுகவின் கட்சி நிதி என்று அவர் குறிப்பிடவில்லை. அப்படியிருக்க, அந்த வார்த்தையை கேட்டவுடனேயே திமுகவினர் ஏன் கொந்தளித்தனர்? திமுகவில் ஒருவர் கூட நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்ல முடியுமா? முன்பெல்லாம் முதலமைச்சர் பேசி முடித்தவுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிந்து விடும். ஆனால் தற்போது முதலமைச்சர் பேசி முடித்த பிறகும் எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். மரபைக் கடந்து கூட கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருந்தும் அவர்கள் பேசாமல் வெளிநடப்பு செய்கிறார்கள். 32 துறைகளில் 16 துறைகள் சபரீசனுக்கும், 16 துறைகள் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்று பங்கிட்டு ஊழல் செய்தனர். இதுவரை எந்த துறையிலாவது பணம் பெறாமல் பணி ஆணைகள் வழங்கியிருக்கிறார்களா? எங்கள் முதலமைச்சர் 400 பேருக்கு பணி ஆணைகள் வழங்கியுள்ளார். நாங்கள் எந்த மரபையும் மீறவில்லை. நான்கு நாட்களாக முதலமைச்சர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பேச வேண்டிய நேரத்தில் அவர் பேசுவார் என்று நாங்கள் கூறினோம். மரபுக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மரபை மீறிச் செயல்படும் கட்சிதான் திமுக. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதும் திமுக தான். எனவே சட்டப் பேரவை மரபு குறித்து பேசுவதற்கான தகுதி திமுகவினருக்கு இல்லை. அவர்கள் முன் வைக்கும் விமர்சனங்களை தேர்தல் நேரத்திலேயே மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதற்கு பதில் கூறி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7