Wednesday, 01 July 2026, 12:01 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:09:38 | Reporter: Admin
ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்குத் டிம் டெக்டர் - ராஸ் அடேர் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ராஸ் அடேர் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும், டிம் டெக்டர் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய பெஞ்சமினும் 15 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் கரேத் டெலானி இணை அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. அபாரமாக விளையாடி வந்த லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், லோர்கன் டக்கர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் டாக்ரெல்லும் தனது பங்கிற்கு 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய கரேத் டெலானி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதன்மூலம் வெறும் ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், இஷான் கிஷன் ஒரு ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மொத்தம் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் திலக் வர்மா 19 ரன்களையும், ஷிவம் தூபே 25 ரன்களையும், அக்ஸர் படேல் 15 ரன்களையும் சேர்த்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேத்யூ ஹம்ப்ரீஸ் மற்றும் மேத்யூ ஹல்லார்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணி இந்தியாவிற்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேத்யூ ஹல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.