Wednesday, 01 July 2026, 03:33 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

மெரினாவில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு மணல் சிற்பம் - மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார்

Published On: 2026-06-26 18:30:04 | Reporter: Admin

News Image

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சமூகத்தின் சம உரிமைகளுக்காகவும், பாலின விழிப்புணர்வுக்காகவும் உலகம் முழுவதும் ஜூன் மாதம் கொண்டாடப்படும் பெருமை மாதம் (Pride Month) 2026ஐ முன்னிட்டு, இன்று (25.06.2026) சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பல்வேறு பாலின அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்கு நிலைகளை கொண்ட நபர்களுக்கான பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் பாகுபாடற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் பாகுபாடின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியின் Gender and Policy Lab-ன் மூலம், Tamil Nadu Rainbow Coalition (TNRC) மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் இணைந்து சென்னையில் பிரைட் மாதம் 2026 அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு தன்மையும், அனைவரையும் உள்ளடக்கும் மதிப்புகளுக்கும், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், பிரைட் மாதத்தை சிறப்பிக்கும் வகையிலும் ரிப்பன் கட்டடம் 23.06.2026 அன்று முதல் 30.06.2026 வரை மாலையில் வானவில் நிறங்களில் ஒளிரூட்டப்படுகிறது. இந்நிகழ்வில் ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:- ஜூன் மாதத்தினை பெருமை மாதமாக (Pride Month) உலகம் முழுவதும் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பாலின அடையாளங்களை கொண்ட சமூகத்தினருக்கான விழிப்புணர்விற்கும் அவர்களுடைய மேம்பாட்டிற்காக இந்த ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினக் கொள்கை ஆய்வகம், தோழி மற்றும் ரெயின்போ அமைப்பினர் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக 23.06.2026 முதல் 30.06.2026 வரை வானவில் வண்ணங்களில் ரிப்பன் கட்டடம் ஒளிரூட்டப்படுகிறது. மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாலினம் தொடர்பாகவும், கிண்டல் செய்தல் மற்றும் வேறுபடுத்துதல் ஆகியவை இருக்கக் கூடாது என்பதற்காகவும், கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியும் இந்த மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 57 இரவு நேர காப்பகங்கள் இருக்கிறது. இதில் 49 செயல்பட்டு வருகிறது. அதில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பாதுகாப்பிற்கும், திறன் மேம்பாட்டிற்காகவும் 2 இரவு நேர காப்பகங்கள் தோழி தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதர காப்பகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் இருள் சூழ்ந்த மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு அந்த இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல், காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7