Wednesday, 01 July 2026, 03:31 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

பிரதமர் மோடியுடன் அமேசான் நிறுவன சிஇஓ சந்திப்பு- ஆலோசித்தது என்ன?

Published On: 2026-06-26 18:29:04 | Reporter: Admin

News Image

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்சி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு இந்தியாவில் 4 லட்சம் கோடி முதலீடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டது. அதாவது, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தனது பல்வேறு தொழில்களை விரிவுபடுத்த 48 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2030-க்குள் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக ஆண்டி ஜாஸ்சி தெரிவித்தார். இதன் மூலம், 2026-2030 காலகட்டத்தில் ஏஐ மற்றும் கிளவுட் கட்டமைப்புக்காக மட்டும் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீடு 21 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும். இதன்மூலம், இந்தியாவில் ஏஐ மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் மாறும். இந்த முதலீட்டின் மூலம், மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள தரவு மையங்களின் திறன் விரிவுபடுத்தப்படும். 2010 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீடு 88 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆண்டி ஜாஸ்சி கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தோம். அதன் பிறகு இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறோம். குறிப்பாக இ-காமர்ஸ், ஏஐ மற்றும் கிளவுட் சேவைகளில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் 48 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளோம். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு துணை நிற்கவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நீண்டகால பங்குதாரராக செயல்படவும் உறுதிபூண்டுள்ளோம்" என்றார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7