Wednesday, 01 July 2026, 04:40 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

இரண்டரை மணி நேர நரக வேதனை பயணம்: கூடுதல் பெட்டிகளை இணைப்பீங்களா அதிகாரிகளே!

Published On: 2026-06-26 18:08:06 | Reporter: Admin

News Image

தஞ்சாவூர்: மயிலாடுதுறை - திருச்சி இடையே இயக்கப்படும் மெமு (MEMU) ரயிலில் போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் நீண்ட தூரம் நின்றுகொண்டே பயணிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, இந்த ரயிலில் உடனடியாகக் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமேக வரவேற்பும்... கொரோனா கால முடக்கமும்! மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர் வழியாகத் திருச்சிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை நிமித்தமாகவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும் பயணித்து வருகின்றனர். இதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்குச் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 16 பொதுப் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலுக்குப் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு இந்த ரயிலின் சேவை வாரத்தில் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டது. மெமு ரயிலாக மாற்றம்: குறைந்த பெட்டிகள், மிகுந்த நெரிசல்! இந்த ரயிலைத் மீண்டும் தினசரி இயக்க வேண்டும் என்ற பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக 12 சாதாரணப் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு திடீரென அந்த ரயில், மின்சாரத் தொடர் வண்டியாக (MEMU) மாற்றப்பட்டு, பெட்டிகளின் எண்ணிக்கை வெறும் 8 ஆகக் குறைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் முதல் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலின் கால அட்டவணை பயணிகளுக்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததே தவிர, பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. 120 கி.மீ தூரம்... நின்று கொண்டே பயணம் செய்யும் அவலம்! இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் கிரி கூறுகையில், "பொதுவாக மெமு (MEMU) வகை ரயில்கள் குறைந்த தூரம் செல்லும் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இதனால் இதில் இருக்கைகள் குறைவாகவும், நின்று கொண்டு செல்வதற்கான இடவசதி அதிகமாகவும் இருக்கும். ஆனால், மயிலாடுதுறை - திருச்சி இடையேயான தூரம் சுமார் 120 கிலோ மீட்டர் ஆகும். இந்தத் தூரத்தைக் கடக்க இரண்டரை மணி நேரம் ஆகிறது. இவ்வளவு நீண்ட தூரப் பயணத்தை முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் எனப் பலரும் தினமும் நின்றுகொண்டே கடக்கும் அவல நிலை உள்ளது." என்றார். போராட்டங்கள் நடத்தியும் அலட்சியம் காட்டும் ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் அல்லது அதற்குச் சாத்தியமில்லை என்றால், முன்பு இருந்தது போலவே சாதாரண எக்ஸ்பிரஸ் பெட்டிகளைக் கொண்டு இந்த ரயிலை இயக்க வேண்டும் எனப் பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும், இதுவரை ரயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்; இல்லையெனில் பழையபடி சாதாரண பொதுப் பெட்டிகளுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றியமைக்க வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7