Wednesday, 01 July 2026, 04:41 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

ஆந்திரா பாணியில் புதுச்சேரி: ஏழை எளிய மக்களுக்கு இலவச சூரிய மின்னொளி திட்டம்!

Published On: 2026-06-26 18:05:06 | Reporter: Admin

News Image

புதுச்சேரி: பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தை பரிட்சார்த்தமாக ஏனாமில் 2,000 வீடுகளுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவியுடன் இலவசமாக செயல்படுத்திட புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாட்டிலேயே முன்மாதிரியாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் 2,000 வீடுகளுக்குப் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் இலவசமாகச் சூரிய மின்னொளி (சோலார்) திட்டத்தைச் செயல்படுத்தப் புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தினசரி மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 'பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம்' (PM-Surya Ghar: Muft Bijli Yojana) கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ரூ.75,000 கோடி முதலீட்டில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. வரும் 2027 மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுமக்களிடையே இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தாராளமான மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு 1 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ.30,000 வீதம், அதிகபட்சமாக (3 கிலோ வாட் வரை) ரூ.78,000 வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக, புதுச்சேரி அரசு தன் பங்கிற்கு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.10,000 வீதம், 3 கிலோ வாட் அமைக்க மொத்தம் ரூ.30,000 வரை மாநில மானியமாக வழங்கி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் மொத்தம் 13,000 வீடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை 3,721 வீடுகளில் மட்டுமே சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு ரூ.29.92 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் 9,000 வீடுகளுக்கு இத்திட்டத்தை விரைந்து கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து புதுச்சேரி மின்சாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள் தரப்பில், "புதுச்சேரியில் 3 கிலோ வாட் சூரிய மின்னொளி திட்டத்தை அமைக்க மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில் மத்திய அரசின் ரூ.78,000 மற்றும் மாநில அரசின் ரூ.30,000 என மொத்தம் ரூ.1,08,000 மானியமாகவே கழிந்துவிடுகிறது. மீதமுள்ள ரூ.92,000 தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டும். நுகர்வோர் சம்மதிக்கும் பட்சத்தில், இந்த மீதித் தொகைக்கு எளிய முறையில் வங்கிக் கடனுதவி பெற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்ய ዝግாராக உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தின் போது, பக்கத்து மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் வீடுகளில் சூரிய மின்னொளி திட்டத்தை அம்மாநில அரசே முழுமையாக இலவசமாகச் செயல்படுத்தி வரும் தகவல் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கு வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்யும் செலவு கணிசமாகக் குறைந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர அரசின் நடைமுறையைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஏழை மக்களுக்கு உதவ அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். ஏனாமில் முதற்கட்டமாக 2,000 வீடுகள்: இதன்படி, பரிட்சார்த்த முறையில் (Pilot Project) ஏனாம் தொகுதியில் உள்ள: தொமுதிபேட், தரியால்திப்பா, கிரியப்பேட்டா, சாவித்ரி நகர் ஆகிய நான்கு பகுதிகளில், மாதம் 300 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 2,000 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொக போக, மீதமுள்ள நுகர்வோர் பங்களிப்புத் தொகையைப் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் பெற்று, முற்றிலும் இலவசமாக சோலார் பேனல் அமைத்துத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இறுதி அனுமதி பெற்றவுடன், ஏனாம் பகுதியில் இத்திட்டம் மிக விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7