Monday, 29 June 2026, 06:06 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

நெருப்பு துகள்களை அள்ளி வீசிய ஆண் பக்தர்கள்; பக்தியோடு முந்தானையில் தாங்கிய பெண்கள்

Published On: 2026-06-26 23:06:38 | Reporter: Admin

News Image

சிவகங்கை: திருப்பத்தூரில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இணைந்து கொண்டாடும் 'அல்லாசாமி பூக்குழித் திருவிழா' நடைபெற்றது. இதில், நெருப்பு துகள்களை ஆண் பக்தர்கள் அள்ளி வீச, அதை பெண்கள் பக்தியோடு முந்தானையில் தாங்கிய விநோத நேர்த்திகடன் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வஞ்சினிபட்டி கிராமத்தில், இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இணைந்து கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அல்லாசாமி பூக்குழித் திருவிழா' இன்று (ஜூலை 26) அதிகாலை பக்திப் பெருக்குடனும், மத நல்லிணக்கத்துடனும் நடைபெற்றது. 17-ஆம் நூற்றாண்டிலிருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக, பல தலைமுறைகளைக் கடந்து இந்த விநோதத் திருவிழா இன்றும் தொய்வின்றி அரங்கேறி வருகிறது. மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில், மதங்களை விஞ்சிய மனிதநேயமும், ஒற்றுமையும் மிளிர்வதைக் காண முடிகிறது. ​விழாவையொட்டி, இக்கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் தங்களது வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு கறி விருந்து அளித்து உபசரித்தனர். ​அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் முற்றிலும் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு விரதமிருந்து இந்த விழாவைக் கொண்டாடினர். விழாவின் தொடக்கமாக, மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய சகோதரர்களால் 'பாத்தியா' ஓதப்பட்டது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இந்துக்கள் மல்லிகைப் பூ, சர்க்கரை ஆகியவற்றை வைத்து, இரு கைகளைக் குவித்து 'அல்லா'வை மனமுருகி வழிபட்டனர். தொடர்ந்து, கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியை மூன்று முறை வலம் வந்து, தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அப்போது அங்கிருந்த ஆண் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி அதில் தகித்துக் கொண்டிருந்த நெருப்பு துகள்களை மண்வெட்டியால் அள்ளி வீசினர். ​இதனைச் சுற்றியிருந்த பெண்கள் தங்களது முந்தானையை ஏந்தி தாங்கிப் பிடித்து, நெஞ்சில் ஒற்றிப் பின்பு கீழே கொட்டினர்.​ குழந்தை வரம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும் பெண்கள் இந்த விநோத நேர்த்திக் கடனைச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். நெருப்பை முந்தானையில் வாங்கும் வேளையில், சுற்றிலும் கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு பக்தி முழக்கமிட்டனர். விழாவின் நிறைவாக, பூக்குழியில் இருந்த புனிதச் சாம்பலை இஸ்லாமிய சகோதரர்கள் அள்ளி, அங்கு திரண்டிருந்த இந்துக்களின் நெற்றியில் பிரசாதமாகப் பூசி மகிழ்ந்தனர்.​ இந்துக்களின் கலாச்சாரமும், இஸ்லாமியர்களின் ஆன்மீக மரபும் இணைந்து, மத நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழும் இந்த வஞ்சினிபட்டி அல்லாசாமி திருவிழா, இன்றைய காலகட்டத்திலும் மனிதநேயத்தை உலகிற்கு பறைசாற்றும் உன்னத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7