Monday, 29 June 2026, 06:06 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Entertainment / Article

Entertainment

கீழடி ஆய்வறிக்கை விவகாரம்: களத்தில் மறு ஆய்வு செய்யும் உள்நிலைக் குழு - ஏஎஸ்ஐ தலைமை இயக்குநர் தகவல்

Published On: 2026-06-26 23:05:38 | Reporter: Admin

News Image

மதுரை: அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த கீழடி அகழாய்வு குறித்த முதல் இரண்டு கட்ட அறிக்கையை களத்திற்கே சென்று உள்நிலைக்குழு மறு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 லிருந்து 2015 வரை அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு இரண்டு கட்ட அகழாய்வு பணிகளை நடத்தியது. இந்த அகழாய்வு குறித்த முதல் இரண்டு கட்ட ஆய்வறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா குழு சமர்ப்பித்தது. 982 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், அங்கு செய்யப்பட்ட விவசாய பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தமது அறிக்கையில் அமர்நாத் ராமகிருஷ்ணா தெளிவுபடுத்தியிருந்தார். கி.மு. 800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் கூட இந்திய தொல்லியல் துறை, கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையை ‘தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது’ என மதிப்பீட்டுக் குழு விமர்சித்திருந்தது. தொடர்ந்து, மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறும் இந்திய தொல்லியல் துறை அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த கடிதத்துக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, “அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளை கொண்டு கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்யவேண்டிய அவசியமும் இல்லை" என தெரிவித்திருந்தார். மேலும், “குழுவின் மதிப்பீடு துல்லியமற்றது, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது” எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழுவிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில், தற்போது தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் தேசிய பணிக்குழு இயக்குநராக உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு, கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று, தொல்லியல் துறை மீண்டும் ஓர் கடிதத்தை அனுப்பியது. அதில், மதிப்பீட்டு குழு குறிப்பிட்டிருந்தவாறு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மே 11ஆம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணா ஏஎஸ்ஐ-யின் உள் ஆய்வுக்குழுவுக்கு ஓர் மறுப்பு கடிதத்தை அனுப்பினார். அதில், “எனது மனசாட்சிக்கும், தொல்லியலில் தனக்கு இருக்கும் சிறந்த அறிவின் அடிப்படையிலும் உண்மையாகவே அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளளேன். எனவே தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வமான அறிவுறுத்தலையும் நான் மீறியிருப்பதாக குற்றம்சாட்டுவது தவறு. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் நான் சமர்ப்பித்த எனது கீழடி அகழாய்வு அறிக்கையின் நகலையும், அதன்மீது உள் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவின் விமர்சனக் குறிப்புகளையேே என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக என்னுடைய அறிக்கையை மேம்படுத்துமாறு கோரியுள்ளது. குறிப்பாக, எவ்விதமான ஏற்புடைய காரணங்களையோ அல்லது தகுந்த நியாயங்களையோ ஆய்வுக்குழு அதில் குறிப்பிடவில்லை. ‘விமர்சன மதிப்பீடு மற்றும் பரிந்துரைகள்’ என்ற தலைப்பிலான 114 பக்க அறிக்கையை அவர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. மேலும், கீழடி அகழாய்வு இயக்குநராக எனது கடமைகளை நிறைவேற்றியபோது இந்தியத் தொல்லியல் துறையில் எதிர்பார்க்கப்படுவதைப் போலவும், பின்பற்றப்படுவதைப் போலவும் மிக உயர்ந்த தொழில்முறை நேர்மையோடு, எனது முழுத் திறனையும் பயன்படுத்தி மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளேன். அதுபோலவே எனது அறிக்கையை எழுதியபோதும், தொல்லியல் துறையின் விதிமுறைகளையே பின்பற்றினேன். மேலும், அகழாய்வு செய்யப்பட்ட தளத்திலிருந்து கிடைத்த பொருட்களை வைத்து, கலாச்சார மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் எனது முடிவுகளைத் தெரிவித்துள்ளேன். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள எனது முடிவுகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடும், முழுமையான நம்பகத்தன்மையோடும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது முந்தைய அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை. நிறுவப்பட்ட நிர்வாக நெறிமுறைகள் மற்றும் பணி விதிகள் ஆகியவற்றின்படி எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தலையும் கடைப்பிடிக்க நான் மறுத்ததில்லை" என அக்கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் 982 பக்கங்கள் கொண்ட கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறைக்கும் (ASI), தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையை "களத்தில் வைத்து மறுஆய்வு செய்ய" ஒரு உள்நிலைக் குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎஸ்ஐ-யின் தலைமை இயக்குநர் யதுபீர் சிங் ராவத், தமிழக எம்பி டி. ரவிக்குமாருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.கீழடி அறிக்கையை மேலும் தாமதமின்றி உடனடியாக வெளியிடக் கோரி மார்ச் 24 அன்று ஏஎஸ்ஐ-க்குக் கடிதம் எழுதியிருந்த விசிக எம்பி ரவிக்குமாருக்கு, ஜூன் 24 அன்று ஏஎஸ்ஐ தரப்பில் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதில் கடிதத்தில், "2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த அகழாய்வு அறிக்கை, துறை சார்ந்த இரண்டு நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு, நிபுணர்களைக் கொண்ட உள்நிலைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது" என்று ஏஎஸ்ஐ தலைமை இயக்குநர் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், "அறிக்கையில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அறிக்கையை வெளியிடுவதற்கு ஏற்றதாக மாற்றத் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு அகழாய்வு மேற்கொண்டவரிடம் அது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைகளை அகழாய்வு மேற்கொண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது, அந்த அறிக்கையை உள்நிலைக் குழு களத்தில் வைத்து மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் ராவத் அதில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஏஎஸ்ஐ-யின் ஐந்து பேர் கொண்ட உள்நிலைக் குழுவின் தலைவரான நந்தினி பட்டாச்சார்யா சாஹு, ஏஎஸ்ஐ இடமிருந்து இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது, அரசு தரப்பு ஆஜரான வழக்கறிஞர், "ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை வெளியிடப்படும்" என நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2024 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், "ஒன்பது மாதங்களுக்குள் அந்த அறிக்கையை வெளியிடு வேண்டும்" எனு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த காலக்கெடு நவம்பர் 2024ல் முடிவடைந்த போதிலும், அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7