Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி ரூ.20 கோடி சொத்து சேர்த்த பெண் தாசில்தார்

Published On: 2026-06-26 23:02:39 | Reporter: Admin

News Image

தெலுங்கானாவின் ஐதராபாத் ஷாமிர்பேட்டையில் தாசில்தாராகவும் இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகோமா சுசரிதா. இவர் கடந்த மாதம் 30 ஏக்கர் விளை நிலத்தை, விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, அதில் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இதை தொடர்ந்து சுசரிதா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கைதான சுசரிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன்படி, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சுசரிதா, அவரது நெருங்கிய தொடர்புகளின் வீடுகள், பண்ணை மற்றும் தோட்டங்களில் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில், ஐதராபாதில் 5.05 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு வீட்டு மனைகள், சித்திபேட்டை மாவட்டத்தில் 2.17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்டவைக்கான ஆவணங்கள் சிக்கின. இவற்றின் சந்தை மதிப்பு, 20 கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரொக்கமாக 12 லட்சம் ரூபாய், வங்கி வைப்புத்தொகை 38 லட்சம் ரூபாய், இரண்டு சொகுசு கார்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுசரிதாவுக்குச் சொந்தமான கூடுதல் சொத்து ஆவணங்கள் குறித்தும், பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுசரிதா தனது வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் சுசரிதா மீதான பிடி மேலும் இறுகி உள்ளது. தெலுங்கானாவில் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சமாக ரூ.20 கோடி சொத்து சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7