Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

வங்கதேசத்தின் முக்கிய துறைமுக திட்டம்: இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறித்தது சீனா

Published On: 2026-06-26 22:29:41 | Reporter: Admin

News Image

டாக்கா: வங்கதேசத்தில் இந்தியா மேற்கொள்ளவிருந்த முக்கிய துறைமுக திட்டத்தை, சீனா தட்டிப் பறித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அப்போதைய அரசு, இந்தியாவின் நிதியுதவியுடன் மோங்லா, சிட்டகாங் ஆகிய இடங்களில் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 2015ல் கையெழுத்திட்டது. தொடர்ந்து, பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களை மேம்படுத்த, ஹிராநந்தானி குழுமத்தை இந்தியா தேர்ந்தெடுத்தது. 2024ல் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. மேலும், இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நில மேம்பாட்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு பணியும் செய்யவில்லை என்பதை காரணம் காட்டி, அத்திட்டத்தை கடந்தாண்டு வங்கதேச அரசு ரத்து செய்தது. இந்த சூழலை பயன்படுத்திய சீனா, மாற்று திட்டத்தை வங்கதேச அரசிடம் முன்வைத்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்ற அவர், மோங்லா துறைமுகம் அருகே, 110 ஏக்கர் பரப்பளவில் பொருளாதார மையம் அமைக்கும் ஒப்பந்தத்தில் அந்நாட்டுடன் கையெழுத்திட்டார். மேலும், டீஸ்டா நதி மேலாண்மை திட்டத்திற்கு, சீனா தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் கை நழுவிச் சென்றது, இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா, மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து, 188 கி.மீ., தொலைவிலேயே உள்ளது. இந்தியாவுக்கு அருகே உள்ள இத்துறைமுக பகுதி யில், சீன நிறுவனம் வருவது, அந்நாட்டுக்கு உளவு பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தருவதாக இந்தியா கருதுகிறது. மேலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் இந்தியா கருதுகிறது. மோங்லா துறைமுகத்தையும் சேர்த்து, பாகிஸ்தானின் குவாடர் முதல், கிழக்கு ஆப்ரிக்காவின் ஜிபூட்டி வரை, இந்திய பெருங்கடலின் 17 துறைமுக திட்டங்களில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது, இந்தியாவின் பாரம்பரிய பாதுகாப்பை சிதைக்கும் முயற்சி என மத்திய அரசு கருதுகிறது. அரசு முறை பயணமாக சீனா சென்ற வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், இறுதி நாளில் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும், சுமுகமான நிர்வாகத்துக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், டிஜிட்டல் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வங்கதேசத்துக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7