Thursday, 02 July 2026, 05:08 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு கவுரவ விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டு

Published On: 2026-06-26 22:25:42 | Reporter: Admin

News Image

சென்னை: 'உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில், மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது' என, கவுரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த டிசம்பரில் தேர்வு நடந்தது. மொத்தம், 42,064 பேர் தேர்வு எழுதினர். கடந்த பிப்ரவரியில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் வெளியாகின. மீதமுள்ள, 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் நடந்திருப்பதாக, கவுரவ விரிவுரையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி, யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் தங்கராஜ்: உதவி பேராசிரியர் தேர்வில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவின்படி, பணி நியமன ஆணை பெற்ற ஐந்து பேரில், இருவரின் பணி அனுபவ மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒரு தேர்வரின் பணி, அனுபவ மதிப்பெண் சான்றிதழ் சரி பார்ப்புக்கு முன், 11 ஆக இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 13 ஆக உயர்ந்தது. அதேபோல, மற்றொருவருக்கு, பணி அனுபவ மதிப்பெண், பூஜ்ஜியத்தில் இருந்து, 15 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், கட்டுரை வினாக்களுக்கு பதில் அளித்தவர்களுக்கு, 50க்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு 50க்கு 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு, விடைக்குறிப்பு ஏதும் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கலைக்கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் கூறியதாவது: உதவி பேராசிரியர் தேர்வில், தாள் 2ல், ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண் வீதம் 5 கேள்விகளுக்கு, 50 மதிப்பெண்கள் இடம் பெற்றன. தி.மு.க., ஆட்சியாளர்கள், கஜானா விளையாட்டை காட்டவே, இப்படி மதிப்பெண்கள் உருவாக்கப்பட்டன. அதில், சிலருக்கு 49, சிலருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வர், முதல் தாளில், 150க்கு 111 மதிப்பெண் பெறுகிறார். ஆனால், கட்டுரை பகுதியில், அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு, 49 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு, ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. கஜானாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு, மதிப்பெண் வாரி வழங்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7