Monday, 29 June 2026, 06:06 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

IND vs IRE: நல்லா இருந்த இந்திய அணி.. தோல்விக்கு காரணமே இதுதான்.. கம்பீர், ஸ்ரேயாஸ் மெகா சொதப்பல்கள்

Published On: 2026-06-26 23:32:34 | Reporter: Admin

News Image

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வரலாறு காணாத அவமானத்தைச் சந்தித்துள்ளது. அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசுர பலத்துடன் களம் இறங்கிய இந்திய அணி, அயர்லாந்திடம் முதன்முறையாகத் தோற்றுப் போயிருப்பது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் எடுத்த அணித் தேர்வு முடிவுகள், ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி என பலவற்றையும் சுட்டிக் காட்டி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம். பெல்ஃபாஸ்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் லார்கன் டக்கரின் 50 ரன்கள் மற்றும் காரெத் டெலானியின் அதிரடி 49 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி 18.5 ஓவர்களில் வெறும் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. எளிய அசோசியேட் அணியான அயர்லாந்திடம் இந்தியா தோற்றதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு, முதல்முறையாக டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, மந்தமான பேட்டிங் மற்றும் தவறான வியூகங்கள் என ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கேள்விக்குறியாகியுள்ளது. உலகக் கோப்பையை வென்று தந்ததுடன், 50 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பதிவு செய்த சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து நீக்கியதற்கு இதுதான் பலனா? என்று ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ-ஐ சாடி வருகின்றனர். அயர்லாந்தில் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைக் காண மைதானத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்படும் அளவுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவரைப் பிளேயிங் லெவனில் சேர்க்காதது அணி நிர்வாகத்தின் பிடிவாதம் மற்றும் பயத்தைக் காட்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொருபுறம், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கி ரன் மெஷினாகச் செயல்பட்டது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் 16வது ஓவரில் அதுவரை பந்து வீசாத வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. மறுபுறம், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோரின் மந்தமான பேட்டிங் அணுகுமுறை தோல்வியை உறுதி செய்தது. திலக் வர்மா ஒருநாள் போட்டி போல 21 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்று இருக்கும் இந்த புதிய மிடில் ஆர்டர் சுத்தமாக எடுபடவில்லை. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தேவையற்ற சோதனைகளும், வெல்லும் கூட்டணியை மாற்றிய பிசிசிஐ தேர்வுக்குழுவின் அரசியலுமே இந்த அவமானத்திற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7