மணவிழாக் காலங்களில்
மகிழ்ந்திருப்பார்கள்
பொருள்கள் கேட்டுக்
குவிந்து நிற்பார்கள்
அரசாணி பானை தொடங்கி
எல்லாமும்..
அப்புறம் பொங்கல்
சமயங்களில் புது அடுப்புகளுக்குத்
தெருவில் தலையில் ஒன்றும்
இருகைக் கக்கங்களிலுமாக
அடுப்புகள் சுமந்து
குரலெடுத்து வருவார்கள்..
கோடைக்காலங்களில்
பானைத் தண்ணீர் குடிக்க
தனிக்குடித்தனம் போக
புதுமனை புகுவிழா என
ஆணைகள் குவிந்திருக்கும்..
இப்போது எல்லாமும்
எல்லாமும் களிமண்ணாகவே
கிடக்கின்றன
களிமண்ணை குழைக்கவும்
சுட்டெடுக்கவும் யாருமில்லை
எந்த புத்தாணையும் இல்லை..
ஆனாலும் ஒன்றிரண்டு
வரவே செய்கின்றன..
மணவிழா நாள்கள் பொங்கல்
போக மற்ற நேரங்களில்
கட்டட வேலைக்குப் போகத்
தயாராகிவிட்டார்கள்..
இன்னமும் ஆணைகள் வந்தால்
இரவுபகலென்று பாராமல்
முடித்துத் தரும்வாழ்வில்
இருக்கிறது களிமண் மட்டுமல்ல
நிறைந்த ஈரமும்தான்
ஈரமற்றவர்கள் நிறைந்த
உலகில்..
ஹரணி, தஞ்சாவூர்.