tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

அக்னி நட்சத்திரம்: திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி, மே 4

அக்னி நட்சத்திரம் துவங்கி இருப்பதையொட்டி திருப்பதிக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று கேட்ட கேள்விகளுக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி பதில் அளித்தார்.

அப்போது, அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி கூறியதாவது:-

அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ள நிலையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல்கள், கூல் பெயிண்டுகள் கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். நாங்கள் அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கிறோம்.

நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருமலையில் ஆகாசகங்கா ஸ்ரீ பாலஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆகாச கங்கையில் உள்ள ஸ்ரீ பால ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

------------

ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

புதுடில்லி, மே 4

அரசியல் பழிவாங்கும் நோக்கில் இருப்பதாக கூறி ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியது.

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 25ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலைவரை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சிறையில் அடைத்துள்ளதாக கூறி ஆம் ஆத்மியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார பாடல் கடந்த 25ம் தேதி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை அந்த கட்சியின் எம்.எல்.ஏ. திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார்.

இந்த பிரச்சார பாடலில், பா.ஜ.க. மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி பிரச்சார பாடலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விளம்பரக் குறியீடுகளை மீறியதால், பாடலில் வரும் காட்சிகளை மாற்றியமைக்க ஆம் ஆத்மியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சார பாடலில் கட்சி மாற்றங்கள் செய்ததை அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

---------

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு

ராஞ்சி, மே 4

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என பிரதமர் மோடி பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மக்கள் அனைவரும் வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்து ஊழல் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தார்கள். அதன் விளைவாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்களை கண்டு காங்கிரசின் கோழை அரசு உலக அரங்கில் அழுதது. உலக அரங்கில் இந்தியா அழுது கொண்டிருந்த காலம் போய்விட்டது. இப்போது பாகிஸ்தான் உதவிக்காக அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலை பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் நக்சலைட்கள் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் ஒரு ஆபத்தான விஷயத்தை கூறியுள்ளனர். இவர்கள் இப்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று ஒன்று கூடி முடிவு செய்திருந்தனர்.

இப்போது காங்கிரஸ், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டை கொள்ளையடித்து, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

----------

3-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அமித் ஷா, டிம்பிள்

காந்திநகர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பல்வேறு விஐபி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

அமைச்சர் அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனல் படேல் களமிறங்கி உள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் அமித் ஷா 5.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டிம்பிள் யாதவ்: உ.பியின் மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் தொகுதி ஆகும். கடந்த 2022-ல் அவர் காலமானார். அப்போது அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார்.அதே தொகுதியில் அவர் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா: மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணாமக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராவ் யத்வேந்திர சிங் களமிறங்கி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போட்டியிட்டார். அப்போது பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் கிருஷ்ண பால் சிங்கிடம் அவர் தோல்வி அடைந்தார்.

--------------

பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் புரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

புரி: பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுசாரித்தா மொஹந்தி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுசாரித்தா மொஹந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நான் செய்தியாளராக பணியாற்றுகிறேன். எனது வருவாய் மிகவும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் பிரச்சார செலவுக்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட முயன்றேன். ஆனால் எனது முயற்சி வெற்றி பெறவில்லை. எதிரணியில் பிஜு ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் பணத்தை வாரியிறைக்கின்றனர். என்னிடம் பணம் இல்லை, கட்சி தரப்பிலும் பணம் வழங்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகி உள்ளேன்.

ஒடிசாவின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை கட்சி தலைமை நிறுத்தி உள்ளது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம். இதுபோன்ற சூழலில் நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புரி மக்களவைத் தொகுதியில் வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே புதிய வேட்பாளரை காங்கிரஸ் தலைமை உடனடியாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு புரி மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த பினாகி மிஸ்ரா 5.38 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதர வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவில் ஐக்கியமாகி விட்டார். அந்த தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது புரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுசாரித்தா போட்டியில் இருந்து விலகி உள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

--------

அனுமன் கோயில் அர்ச்சகரிடம் ஆசி பெற்ற அசதுத்தீன் ஒவைசி

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (எம்ஐஎம்) பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது.

தற்போது இங்கு அசதுத்தீன் ஒவைசி எம்பியாக உள்ளார். இவரை எதிர்த்து இங்கு இம்முறை பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். இவருக்கு முஸ்லிம் பெண்களின் பேராதரவு உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இம்முறை அசதுத்தீன் ஒவைசியா? மாதவி லதாவா? எனும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று அசதுத்தீன் ஒவைசி ஹைதராபாத்தில் மூசராம்பாக் பகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கிருந்த ஒரு அனுமன் கோயிலை தாண்டி செல்லும்போது, அவருடன் வந்த ஆதரவாளர்கள், அசதுத்தீனை ஆசீர்வதிக்கும்படி கோயில் பூஜாரியை கேட்டுக்கொண்டனர்.

இதற்கு சம்மதித்து அசதுத்தீன் ஒவைசியும் கோயில் நோக்கி வந்தார். அப்போது கோயில் அர்ச்சகர், ஒவைசிக்கு மாலை போட்டு, காவி பொன்னாடை போர்த்தி, அட்சதை தூவி ஆசீர்வதித்தார். இதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஒவைசி, அர்ச்சகருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து பிரச்சாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய அர்விந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த அர்விந்தர் சிங் லவ்லியை வரவேற்ற அக்கட்சி பிரமுகர்கள்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியின் காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் அர்விந்தர் சிங் லவ்லி.

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று அர்விந்தர் காத்திருந்தார். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் மீது அர்விந்தர் சிங் லவ்லி அதிருப்தியில் இருந்தார்.

இதையடுத்து தனது டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி, காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மாதம் 28-ம் தேதி விலகினார்.

மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதாரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால்தான் காங்கிரஸில் இருந்து விலகியதாகவும் அர்விந்தர் சிங்லவ்லி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, “நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன்” என்றார்.

இந்நிலையில், நேற்று அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அர்விந்தர் சிங். அப்போது, லவ்லியுடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

இவர் ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2018-ல் பாஜகவிலிருந்து விலகிய லவ்லி மீண்டும் காங்கிரஸுக்கு வந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

-------------

வேட்பாளர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் ‘நோ டியூஸ்' சான்றிதழ்

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரி அல்லது கட்டண நிலுவைஎதுவும் இல்லை (நோ டியூஸ்) என்பதற்கான சான்றிதழ் கேட்டு வேட்பாளர்கள் விண்ணப்பித்தால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் அதனை சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது அதிகாரிகள் வழங்க வேண்டும். நிலுவை வைத்திருக்கும் ஒருவர் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரும்போது, அவருக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் ‘நோ டியூஸ்’ சான்றிதழ் வழங்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவுடன் படிவம் 26-ல் உறுதிச்சான்று அளிக்க வேண்டும். இது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

------

தேர்தல் பணியின்போது மரணமடைந்த அசாம் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை

கோப்புப்படம்

புதுடெல்லி: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உடல் நலிவடைந்து மரணமடைந்த அசாம் காசிரங்கா மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி அதிகாரியின் குடும்பத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை கிடைக்கச் செய்துள்ளார்.

அசாமில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காசிரங்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் பணியில் சுகுமால் ஜோதி போரா என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் ஹோஜாய் மாவட்ட சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடுத்த நாள் குவாஹாட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 20-ம் தேதி சுகுமால் ஜோதி போரா மரண மடைந்தார்.

இந்நிலையில், அவர் மரணமடைந்து பத்து நாட்கள் கழித்து அவரது மனைவி ஜனதா சோரோங், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். நடந்தவற்றை விளக்கி தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டிவந்த ஓரே நபர் மரணமடைந்துவிட்டதால் தானும் தனது மகனும் நிர்க்கதியாக தவிப்பதாக உருக்கமான கடிதத்தை அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்தார்.

தனது கணவரை காப்பாற்றும் முயற்சியில் ஆம்புலன்ஸ் சேவைக்கு செலுத்திய தொகை மற்றும் கருணை அடிப்படையில் தனக்கு இழப்பீடு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கோரிக்கையை ஏற்ற தலைமை தேர்தல் ஆணையர், இரண்டே நாட்களில் அவருக்கு உரிய இழப்பீடு கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் விரைந்து செயல்படுமாறு அசாம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த மே 2-ம் தேதி அசாம் தலைமை தேர்தல் அதிகாரியும், ஹோஜாய் மாவட்ட ஆட்சியரும் இணைந்து பாதிக்கப்பட்ட நபரின் இல்லத்துக்குச் சென்று சுகுமால் ஜோதி போராவின் மனைவி ஜனதா சோரோங்கின் வங்கிக் கணக்கில் ரூ.15.3 லட்சம் செலுத்தினர்.

--------

அமித் ஷா மார்பிங் வீடியோ தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டி கைது

அருண் ரெட்டி

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய வீடியோவை ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றி, அவர் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிராக பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது தொடர்பாக ஹைதரா பாத்தில் காங்கிரஸ் சமூக வலைதள குழுவைச் சேர்ந்த 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போலி வீடியோ தயாரிப்பில் தொடர்புடைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் அருண் ரெட்டியை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர் ‘ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு வைத்துள்ளார். இதை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அமித் ஷாவின் போலி வீடியோவை இவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்வருக்கு சம்மன்: போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும்,இதர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் டெல்லி போலீஸார்சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோவை வெளி யிட்டதில் தனக்கு சம்பந்தம் இல்லை என ரேவந்த் ரெட்டியின் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க