இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்?
Sep 08 2025
22

வாஷிங்டன்:
இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவால் பணியமர்த்தப்பட்ட அரசியல் தரகர் / உத்தி வகுப்பாளர் ஜேசன் மில்லர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை சந்தித்துள்ளார்.
எஸ்ஹெச்வி பார்ட்னர்ஸ் (SHW Partners LLC) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜேசன் மில்லர். இவர் கடந்த ஏப்ரலில் இந்திய தூதரகத்தால், இந்தியாவுக்கான அரசியல் தரகராக (லாபியிஸ்ட்) நியமிக்கப்பட்டார். இதற்காக இவருக்கு ஆண்டுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது.
ட்ரம்ப்பை சந்தித்ததை மில்லர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், எந்த விஷயத்துக்காக இந்தச் சந்திப்பு நடந்தது என்பதை மில்லர் தெரிவிக்கவில்லை. எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களில், “வாஷிங்டன்னில் பிரமாதமான வாரம். அதிபரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பணியை சிறப்பாக முன்னெடுங்கள் ட்ரம்ப்” என்று அவரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
ஜேசன் மில்லர் நியமனம் குறித்து கடந்த மே மாதம் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதுவொன்றும் புதிய நடைமுறையில்லை. 1950 முதலே இந்தியாவில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்களாலும் இத்தகைய அரசியல் தரகர்கள் பணியில் இருந்துள்ளனர். இது போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும். தேவைப்படும் போது அவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இது போன்ற தரகர்களை பயன்படுத்துவது தொடர்பான அனைத்து நிகழ்வுகள் பற்றி தரவுகளும் பொது வெளியிலேயே உள்ளனர். 2007-ல் அணுசக்தி கொள்கை உடன்பாடு தொடங்கி பல்வேறு தருணங்களிலும் இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை எடுத்துரைக்க இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் இது போன்று லாபியிஸ்ட்களை பயன்படுத்துவது என்பது காலங்காலமாகவே நடைமுறையில் உள்ள ஒன்றாகும்” எனக் கூறியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?