காதலிக்குமாறு பிளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்திய வாலிபர்: உதவிய நண்பர்கள் - பாய்ந்தது போக்சோ சட்டம்
Aug 10 2025
15

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படிக்கும்போதே அதேபகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால், மாணவியின் பெற்றோர் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் உறவினர் வீட்டுக்கு அவரை அனுப்பி வைத்து, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வருமாறு ஏற்பாடு செய்தனர். மாலை வகுப்பு முடிந்ததும் மாணவி சக்கரகுப்பம் வழியாக தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பாட்டி வீட்டுக்கு மாலை நேரத்தில் சென்று கொண்டிருந்தார். இதையறிந்த பிரசாந்த் மீண்டும் மாணவியிடம் வந்து தன்னை காதலிக்குமாறு கூறி கட்டாயப்படுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பிரசாந்த் தனக்கு உதவியாக 3 நண்பர்களை உடன் அழைத்துச் சென்றிருந்தார்.
நண்பர்களும், பிரசாந்துக்காக மாணவியிடம் பேசி அவரை காதலிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், மாணவி பிரசாந்த்தை காதலிக்க மறுத்து விட்டார். உடனே மாணவி அச்சத்தில் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து 4 பேரையும் பிடித்து தாக்கினர். பொதுமக்கள் பிடியில் இருந்து 4 பேரும் விடுபட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிகுப்பத்தைச் சேர்ந்த முரளியின் மகன் பிரசாந்த் (வயது 26) மற்றும் அவரின் 3 நண்பர்கள் எனக் கூறினர். அதில் பிரசாந்த் என்பவர்தான் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?