சென்னை விமான நிலையத்தில் போலி நகை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக சுங்கத் துறை அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு முனையத்தில் மத்திய அரசின் வரிச்சலுகை பயன்படுத்துவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக சுங்கத் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள நகை தயாரிப்பாளர்கள், நகை மொத்த வியாபாரிகள் ஆகியோர் தங்க நகைகள் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வது வழக்கம். இந்த கட்டிகள் மூலம் 22 காரட் தரத்தில் தங்க நகைகள் தயார் செய்யப்பட்ட பின்னர், அவை சவுதி அரேபியா, துபாய், கத்தார், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மத்திய அரசு வழங்கும் வரி விலக்கை பெறுவதற்கு சென்னையில் சில நகை வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து 24 காரட் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துவிட்டு, 22 காரட் தங்க நகைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் இவ்வாறு போலி நகைகளை ஏற்றுமதி செய்து சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதற்கு சுங்கத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் உதவி செய்துள்ளனர். இந்த முறைகேடு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
3 பிரிவுகளின்கீழ் வழக்கு: இதன்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்த அதிகாரி, நகை மதிப்பீட்டாளர், தனியார் ஏற்றுமதி நிறுவன நிர்வாகி, நகைக்கடை உரிமையாளர்கள் என மொத்தம் 13 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் 9 இடங்களில் சோதனை நடத்தி,
பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கு உள்ளான 13 பேரிடமும்
விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளார். அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.