லண்டன்,ஆக.1-
பிரிட்டன் லேபர் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சுயேச்சை எம்.பி.,யுமான ஜெர்மி கோர்பின் துவங்கிய கட்சிக்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரிட்டன் பிரதமராக உள்ள கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மி கோர்பினின் தலைமை யில் இடதுசாரித் தன்மையில் செயல்பட்ட லேபர் கட்சியைக் கைப்பற்றி தலைமை பதவியை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அங்கு நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட கோர்பின் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம் புதிய இடதுசாரி அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு ஜெர்மி கோர்பினுக்கு ஜாரா சுல்தானா என்ற எம்பியும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் “உங்கள் கட்சி” (Your Party) என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இடதுசாரிக் கட்சியை அவர்கள் துவங்கியுள்ளனர். கட்சி துவங்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய அரசியல் கட்சியானது ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி மற்றும் நைஜல் ஃபராஜின் ரிஃபார்ம் யுகே என்ற இரண்டு கட்சிகளுக்கும் நேரடியாக சவால் விடுக்கும் எனவும் அடிமட்ட அளவில் இருந்து அதிகாரம் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் கட்சியை துவக்குவது குறித்து பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், பாலஸ்தீன ஆக்ஷன் என்ற பாலஸ்தீன ஆதரவுக் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க லேபர் கட்சி மேற்கொண்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து ஜாரா சுல்தானா எம்.பி., விலகி கோர்பினுக்கு ஆதரவு கொடுத்தார் அதன் பிறகு தான் புதிய கட்சி துவங்கும் முயற்சி வேகம் பெற்றது. பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தாலும் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு களை முடக்குவது, இனப்படுகொலைகளை தடுக்காமல் அதனை ஊக்குவிப்பது, போருக்கும் ஆயுதங்களுக்கும் அதிகமாகச் செலவு செய்து விட்டு சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வறுமையை மேலும் அதிகரிக்கும் வகையில், நலத்திட்டங்களுக்கான நிதிகளை வெட்டுவது என மக்கள் விரோத நடவடிக்கைகளையே லேபர் கட்சி செய்து வருகிறது. இதனால் மக்களுக்கு லேபர் கட்சியின் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த அதிருப்தியானது ரிஃபார்ம் யுகே என்ற கட்சிக்கே சாதகமாக அமையுமே தவிர போதிய தீர்வுகளை வழங்காது என்பதால் புதிய கட்சியை கோர்பின் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்சி தேர்தலில் வெற்றி பெரும் திட்டத்தோடு மட்டும் உருவாக்கப்பட வில்லை.மக்களுக்கு அதிகாரத்தை மீட்டுத் தரும் ஒரு பரந்த முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஜெர்மி கோர்பின் மற்றும் ஜாரா சுல்தானா ஆகிய இருவரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.