தேச நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
Aug 03 2025
16

புதுடெல்லி, ஆக.1-
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த விவகாரத்தில், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-– ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.
சமீபத்திய நிகழ்வின் (வரிவிதிப்பு) தாக்கத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. தேசநலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.
ஏற்றுமதியாளர்கள், தொழில் துறையினர் உள்பட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அவர்களின் கருத்துகளை பெற்று வருகிறது. பலவீனமான 5 நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவை கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வந்துள்ளோம். இதற்கு விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு, குறு நிறுவனங்கள் ஆகியோரின் கடின உழைப்பே காரணம்.
விரைவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அமைப்புகளும், பொருளாதார நிபுணர்களும் இந்தியாவை சர்வதேச பொருளா தாரத்தில் ஒளிமயமான நாடாக பார்க்கின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16 சதவீதமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், உலகின் உற்பத்தி கூடமாக இந்தியாவை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நமது ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?