நடப்பாண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர், ஆக. 20–
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது.இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக ஜூலை 5-ந்தேதியும், 3-வது முறையாக ஜூலை 20-ந்தேதியும் 4-வது முறையாக ஜூலை 26–ந் தேதியும் நிரம்பியது. இந்நிலையில், ஒகேனக்கல் காவேரி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று காலை நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 120.130 அடியை எட்டியதாலும் அணைக்கு வரும் நீர்வரத்து 1,14,098 கன அடியாக உள்ளதாலும் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 90,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையிலிருந்து இன்று காலை 6 மணியளவில் சுமார் 37,802 கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. மேலும் இது படிப்படியாக நீர்வரத்திற்கேற்ப உயர்த்தப்பட்டு இரண்டு மூன்று நாள்களில் கொள்ளிடம் ஆற்றில் 90,000 கன அடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால், கடலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் கொள்ளிட ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும்ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் கொள்ளிடம் கீழணைஉதவி செய்ய பொறியாளர் தெரிவித்துள்ளார்.