பூங்கா நகர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்

சென்னை, ஆக 21–
சென்னை, பூங்கா நகர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலானது சுமார் 300 ஆண்டு பழமையானதாகும். இத்திருக்கோயிலுக்கு ரூ.5 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின், இன்று வெகு விமரிசையாக குடமுழுக்கு நடந்தேறியிருக்கின்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.
முதலமைச்சர் தலைமையிலான அரசு அமைந்தபின், இன்றைய தினம் நடைபெற்ற 11 கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து 3,412 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் 722 சிவன் திருக்கோயில்களும், 468 விநாயகர் திருக்கோயில்களும், 1,023 அம்மன் திருக்கோயில்களும், 523 பெருமாள் திருக்கோயில்களும், 47 ஆஞ்சநேயர் திருக்கோயில்களும், 48 கிருஷ்ணன் திருக்கோயில்களும், அறுபடை வீடுகளை சேர்ந்த திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி திருக்கோயில்கள் உள்பட 132 முருகன் திருக்கோயில்களும் அடங்கும் என்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மாநில வல்லுநர் குழுவால் 13,931 திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணிக்கு மூன்றுமுறை ஒப்பந்தம் கோரப்பட்டும் நிறைவு செய்யப்படாததால் சற்று சுணக்கம் ஏற்பட்டது. அதனை விரைவுப்படுத்துவதற்கு ஆய்வு கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளோம். வருகின்ற 30–ம் தேதிக்குள் நானும், துறையின் அலுவலர்களும் நேரடியாக கள ஆய்வு செய்து விரைவில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், துணை ஆணையர் இரா. ஹரிஹரன், உதவி ஆணையர் க.சிவக்குமார், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தி ஜே.அசோக்குமார் முந்திரா, அறங்காவலர்கள் ப.வெங்கடேசன், பு.நலேந்திர குமார், பா.சசிகலா, ம.முத்துகுமார், செயல் அலுவலர் இரா.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?