போலி 'கால் சென்டர்' மோசடி சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
Jul 23 2025
35

சென்னை :
'ஆப்பரேஷன் திரை நீக்கு' என்ற பெயரில் நடத்தப்பட்ட, அதிரடி நடவடிக்கை வாயிலாக கைது செய்யப்பட்ட, 212 சைபர் குற்றவாளிகள், 30க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
தமிழக காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் பதிவாகி உள்ள குற்றவாளிகள் பட்டியலை பெற்று, 'ஆப்பரேஷன் திரை நீக்கு' என்ற பெயரில், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக, பட்டியல் அடிப்படையில், தமிழகம் முழுதும் சைபர் குற்றங்களுக்கு எதிராக, தீவிர விசாரணை நடத்தி, 76 பேரையும், இரண்டாம் கட்டமாக, 136 பேரையும் கைது செய்தனர்.
இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் மட்டும், சைபர் குற்றங்கள் தொடர்பாக, பதிவான 159 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக, பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், வெவ்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகின்றனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருகிறோம். கடந்த மாதம் கைதான, 212 சைபர் குற்றவாளிகள், 30க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். அதன் வாயிலாக, பண மோசடி செய்ய, கால்சென்டர்களை நடத்தி உள்ளனர். அவற்றை நடத்த உதவி செய்த நபர்களையும் கைது செய்ய உள்ளோம்.
மேலும், சைபர் குற்றவாளிகள், போலி ஆவணங்கள் வாயிலாக, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை துவக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வங்கி அதிகாரிகளை அழைத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?