மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு மறு ஆய்வுக்கு 11 பேர் குழு அமைப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொத்து வரி விதிப்பு மறு ஆய்வு பணியை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்ளவும், இது தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்யவும் மதுரை ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடுகையில், மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டுகளில் நடந்த சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உதவி ஆணையர் (வருவாய்) மேற்பார்வையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் வழக்கறிஞர் மகேந்திரன் வாதிடுகையில், மதுரை மாநகராட்சி ஆணையர் விரி விதிப்பு முறைகேடு நடைபெற்ற காலத்தை குறிப்பிட்டு போலீஸில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரின் முதல் தகவல் அறிக்கை சரியான பிரிவுகளில் பதிவு செய்யப்படவில்லை. முறைகேட்டில் தொடர்புடையவர்களை தப்பிக்க வைக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும்போது இப்போது கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் நடைபெற்ற சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கப்போவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கமாகும், என்றார்.
அதற்கு நீதிபதிகள், முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரித்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை? முறைகேடு எந்த ஆண்டில் நடைபெற்றாலும் விசாரிக்க வேண்டும், மக்கள் பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றனர். மேலும் நீதிபதிகள், சொத்து வரி மறு ஆய்வு முறையாகவும், சட்டப்படியாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். வரி பாக்கியை வசூலிக்க வேண்டும். இதனால் இப்பணிக்கு துணை வட்டாட்சியர்களின் உதவியை பெறலாம்.
மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் இணைந்து வரி மறு ஆய்வு பணியை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனிக் குழு அமைக்கலாம். சொத்து வரி மறு ஆய்வு எப்படி மேற்கொள்ளப்படும்? அதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? மறு ஆய்வு சரியாக நடைபெற்றால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதைக் கொண்டு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளலாம், என்றனர்.
பின்னர் நீதிபதிகள், மதுரை மாநகராட்சி சொத்து வரி மறு ஆய்வு, கள ஆய்வு, சொத்துக்களை அளவீடு செய்வது உட்பட சொத்து வரி மறு ஆய்வு தொடர்பான செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆக. 26-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப்படை போலீஸார் விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டனர்.