வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 12.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 12.08.25



  பப்பாளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளாயென்று ஆச்சரியப்பட்டேன். நான் அறுபது வருடங்களுக்கு முன்பு சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது ஆங்காங்கே பப்பாளி பழத்தை மரத்திலேயே காக்கைகள் கொத்திக்கொண்டிருக்கும். ஏனோ அப்போதெல்லாம் நாங்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதில்லை. இப்போதோ பப்பாளி பழத்தின் சிறப்பை நினைத்து, கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.


  சீர்காழி ஆர். சீதாராமனின் 'புதுமைப் பெண் ரமணி' என்ற சிறுகதையை படித்து முடித்தபோது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' என்பது நினைவுக்கு வந்தது. எதிர்பாராத பெரிய பிரச்சனையிலிருந்து குடும்பத்தை தாங்கி, சிறப்பாக நடத்தி சென்ற அந்த ரமணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்தவகையில் ராக்கப்பன் கொடுத்து வைத்தவன்தான்!


  தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'நல்ல யோசனை' என்ற சிறுகதை, சினிமா ரசிகர் மன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல யோசனையை சொல்லியிருக்கிறது. நடிக நடிகை ரசிகமன்ற பொறுப்பாளர்கள், தங்களது அபிமான நட்சத்திரங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இப்படி சமூக சேவைகள் செய்து கொண்டாடினால் நன்றாக இருக்கும்.


  நிரஞ்சனாவின் 'யாதுமாகி' தொடர்கதை நல்ல குடும்ப நாவலாக மனதில் ஒரு குதூகலத்தை ஏற்படுத்துகிறது. இது அனாவசியமான பரபரப்புகள் இல்லாமல் இதயத்தைத் தொட்டு செல்லும் மென்மையான நாவலாக அமைந்திருக்கிறது.


  கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் நான் கொடிமரத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு செல்வேன். மற்றபடி கோயில் கொடி மரத்தைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. ஆனால் கவிஞர் பாலசந்தரின் 'கொடி மர தத்துவம்' என்ற கட்டுரை மூலம் ஏராளமான தகவல்களை அறிந்து, கோயில் கொடி மரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தேன்.


  வே.கல்யாண்குமாரின் 'காதல் இனிது' என்ற கவிதையில், 'நாடகத்தில் ஓவியத்தில் காதல் இனிது! நடைமுறையில் காண்பதுவோ அது மிக அரிது' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. 'சாதிமதம் இல்லையெனில் காதல் இனிது! சற்றே நம் வீட்டிலென்றால் கசக்கும் மருந்து' என்றெல்லாம் அவர் சொல்லியிருப்பது மிக சரியானது.


  'சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும்' துணுக்குகள் ஒவ்வொன்றும் அசரடிக்கும் குபீர் சிரிப்பு ரகம். பல இடங்களில் மகிழ்ச்சியாக வாய்விட்டு சிரித்தேன். இதோ இந்த கடித்தை எழுதி முடிக்கும்போது அமெரிக்காவில் இரவு வந்துவிட்டது. இதோ சிரிச்சுக்கிட்டே படுக்கபோறேன்! நிம்மதியாக தூங்கினேனாயென்று நாளை சொல்கிறேன்!


  -சின்னஞ்சிறுகோபு,

    சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%