தமிழ்நாடு இ இதழ் வாசக சொந்தங்களுக்கு வணக்கங்கள்.
விழிஞ்ஞம் துறைமுகத்தின் வளர்ச்சியும், வீரிய செயல்பாடுகளும் அது நீலப்புரட்சியின் நிறைமுகமாக ஜொலிப்பதைக் காட்டுகிறது.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் இந்தியாவில் 3ஆம் இடம்,
ஒரே நாளில் 133.71 மில்லியன் யூனிட் மின்சக்தி தயாரித்து தமிழ்நாடு சாதனை,
அரசுப்பள்ளிகளில் 2024- 2026 கல்வியாண்டில் 4,364 மாணவர்களின் சேர்க்கையாக தமிழக கல்வித்துறை சாதனை,
போன்ற நேர்மறை செய்திகள் தமிழகத்தின் கவர்ச்சி முகமாக மின்னுகின்றன.
திரு. ஓ. பி. எஸ். அவர்களின் பா. ஜ. க. உடனான கூட்டணி துண்டிப்பு,
தமிழக முதல்வர் - திரு. ஓ. பி. எஸ். சந்திப்பு, முதல்வர் - திருமதி. பிரேமலதா சந்திப்பு, அக்கா குஷ்பு அவர்கள் தம்பி விஜய் அவர்களை பா. ஜ. க. கூட்டணியில் இணைந்து கொள்ள விடுத்துள்ள அழைப்பு, கட்சி மாறிய திருமதி. விஜயதாரணிக்கு பதவி வழங்கப்படாத ஏமாற்றம்,
போன்ற சூடான செய்திகள் தமிழக அரசியல் களத்தின் அசல் முகத்தைக் காட்டுகின்றன.
இந்தியா பாக்.கிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலைமை வரலாம் என்ற ட்ரம்ப்பின் அர்த்தமற்ற ஆரூடம்,
பிரேசில் பொருட்கள் மீது 50 % வரிவிதிப்பு என்ற அவரது அறிவிப்பு போன்றவை மற்றொரு வகைப் பொருளாதாரத் தீவிரவாதம் அன்றோ?
கவிதைப் பக்கத்தில் மலர்ந்துள்ள கற்பனைப் பூக்களின் சுகந்தம் அலாதியானது. அதிலும் திருமதி. தமிழ்நிலா அவர்களின் கவிதை "மௌனம் என்பது" அவரது பெயரைப் போலவே கவித்துவத்தின் கரையக் கடக்கிறது. "வேலினும் கூர்மையாகி, பாலினும் தூய்மையாகி உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி" ( மௌனம்) என்ற மௌனத்திற்கான வரையறை உள்ளம் கவர்ந்தது. "பேசும் சொற்களை விட பேசாத மௌனம் அற்புதம் " பாராட்டுக்கள்.
"உன்னுள் ஒளியாய் பிரம்மம் ஒளிர்வதை உணர்வதே உயர்வு. வெளியில் தேடும் வெளிச்சம் பரிச்சயம். வியர்வையும் விளைச்சலும் நிச்சயம். உரம்மிக்க செயல்கள்தான் உன்னுடைய உள்ளார்ந்த விதி என்று நம்பு. விண்ணும் மண்ணும் வாரி வழங்கும் தெம்பு". கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் இது யாருடைய சொல்வண்ணம் என்று. ஆம். திரு. நெல்லை குரலோன் அவர்கள் கருத்துச் செறிவும், கனிச்சுவை அமுதும் கலந்து படைத்துள்ள கவிதை வரிகள் தாம் இவை. "என்னினிய இளைஞனே" என்ற பதத்தை தனது ஒவ்வொரு படைப்புகளிலும் catch word ஆக வைத்து எழுதும் அவரது உத்தி கவனம் ஈர்க்கிறது. பாராட்டுக்கள் சார்.
தஞ்சை. உமாதேவி சேகர் அவர்களின் "அருவியும் பூச்செடியும்" கவிதையில் T. ராஜேந்தரின் சாயல் தென்படுகிறது.
கோவை. திரு. சிவசங்கர் அவர்களின் வாசகர் கடிதத்தில் அனுமார் சுலோகம் சொல்லிவிட்டு 'தவறு ஏதும் இருந்தால் பொருத்தருள்க" என்று ஒரு Disclaimer ம் கொடுத்தது புன்னகைக்க வைத்தது.
திரு. சிவ. முத்து லட்சுமணன் அவர்களின் பெருமிழலைக் குறும்ப நாயனார் வரலாறு பாராட்டுதற்குரியது.
பக்தியின் வீச்சு மிகை விசையுடன் இயங்க இத்தகைய பதிவுகள் இன்றைய காலத்தின் கட்டயாயமாக விளங்குகின்றன. அதை நம் இ இதழ் வழி நிறைவு செய்துகொண்டு வரும் ஆசிரியருக்கு நன்றிகள்.
இதுபோல் பற்பல தகவல்களையும், படைப்புகளையும், தினந்தோறும் இலவசமாக வாரி வழங்கும் வள்ளலான தமிநாடு இ இதழ் குழுமத்திற்கு நன்றிகள் பல.
P. கணபதி
பாளையங்கோட்டை