வாசகர் கடிதம் (P. கணபதி) 04.09.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 04.09.25


===============

04.09.2025 ஆம் நாளின் இ இதழின் பல்சுவகைகள் குறித்த பரிமாறல் இதோ:


பெரும்பாலான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்கு GST வரி குறைக்கப்படுவது சுவையான முதல் செய்தி. அரசுக்கு நன்றிகள்.


சீன ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் முக்கியமான உலகத் தலைவர்களின் பங்கேற்பு ஒரு பாசிட்டிவ் செய்தி. இதேபோல உலக அமைதிக்கான முயற்சியிலும் உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றினால் மனுக்குலம் மேன்மையுறும்.


ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் பேர் புற்று நோயாளி ஆவர் என்ற கணிப்பு ஒரு ரெட் அலர்ட் செய்தி. மக்கள் தங்களின் வாழ்வியல் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது என்பதை உணர்ந்தால் நன்று. 


மாதந்தோறும் மின் பயன்பாட்டுக் கட்டணம் விரைவில் நடைமுறைப்படுத்த அரசு ஆவன செய்தல் அவசியம். 


பாராட்டுகளுக்காக ஏங்குவது மனித மனங்களின் இயல்பு என்கிறார் டேல் கார்னகி. இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் ஜார்கண்ட் மாநில காவல்துறை S. P. எம். அர்ஷி. வாரத்தின் சிறந்த காவலர் விருதினை செயல்படுத்தி காவலரின் கண்ணியத்தை மெருகேற்றுகிறார். பயன் தரும் சிந்தனையில் உதித்த பாஸ் மார்க் திட்டம். பாராட்டுக்கள்.


அஜினமோட்டோ குறித்த விரிவான கட்டுரை மூலம் சரியான பாதையை அடையாளம் காட்டியுள்ளார் நிவேதா யோகேஸ்வரன் அவர்கள். அஜினமோட்டோவின் ஆபத்துக்களைப் படிக்கப் படிக்க எப்படிப்பட்ட இருண்மையில் வணிக உலகம் மக்களை ஆழ்த்துகிறது என்பது புரிகிறது. தற்காலத்துக்குத் தேவையான தரமான வழிகாட்டல் கட்டுரை. நன்றி மேடம். 


தமிழ்த் தென்றல் மதிப்புறு பெரியவர் திரு. வி. க. அவர்களின் வரலாறு அனைவரும் அறிய வேண்டிய அற்புதத் தொகுப்பு. கல்வியாளராக, ஆசிரியராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, தொழிற் சங்கத் தலைவராக, அரசியல் ஆர்வலராக என பரந்துபட்ட ஆளுமையாக விளங்கிய அவரை தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய அவசியத்தை கூறும் முகமாக கட்டுரை மலைக்க வைக்கிறது. அருமையான படைப்பு. 


எம். பி. தினேஷ் அவர்களின் நகைச்சுவை தோய்ந்த கவிதை, இரா. இரவி அவர்களின் ஹைக்கூ அணிவகுப்பு, வே. கல்யாண் குமார், பாரதி முத்து போன்றோரின் படைப்புகள் சிறப்பான தரம். 


நெல்லை குரலோன் அவர்களின் பூரணம், ஓணம் கவிதைகள் சிறந்த poetic prose வகைக்கு எடுத்ததுக்காட்டுக்களாக விளங்குகின்றன. வயிறு நிறையும், மனங்குளிரும் படையல்கள். வாழ்த்துக்கள். 


கொன்னையூர். மா. கணேஷ் அவர்களின் கவிதையில் "சிமயமாய்" என்று ஒரு சொல் வருகிறது. அதன் பொருள் தெரியவில்லை. விளக்கினால் நல்லது. 


எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் "காடு" என்ற நாவலைப் பலமுறை வாசித்து காட்டின் சுவை கண்டு இயற்கையோடு ஒன்றியவன் நான். எனது இளமை நாட்களில் பொதிகைச் சிகரங்களில் பல நாட்கள் தங்கி மழை, மலை வளங்களையும், வன உயிரிகளையும் ரசித்தவன் என்ற வகையில் முதுமுனைவர். திரு. இறையன்பு அவர்களின் வனநாயகம் என்ற நூல் என் மனதுக்கு நெருக்கமாகி உள்ளது. இரா. இரவி அவர்களின் நூல் மதிப்புரையைப் படித்ததும் 50 ரூபாய்க்கு இப்படி ஒரு களஞ்சியமா என்று வியந்து போனேன். வாங்கிவிட முடிவு செய்து கொண்டேன். 


1200 கோடியில் ராஜ மௌலியின் திரைப்படம் என்ற செய்தி அவரே உண்மையான பாகுபலி என்று எண்ண வைத்தது. ப்ரியங்கா சோப்ரா அவரைக் கைவிட மாட்டார் என நம்பலாம். 


ஆனந்த பாஸ்கரில் கயப்பாக்கம் திரு. ரமேஷின் கதையில் வருகின்ற ஆலோசனைகள் கருணாகரனுக்கு மட்டுமல்ல அனைவருக்குமானது. இடுக்கண் களையும் நட்பை மிடுக்காக சொன்னவிதம் அருமை. 


தெய்வம் இதழுக்கான பணியைத் தொய்வின்றித் தொடர வாசக சொந்தங்களை வேண்டிக்கொண்டு நிறைவு செய்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். 

நன்றி.


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%