உணவு டெலிவரி ஊழியர்களுக்கு மானியம் - அரசாணை வெளியீடு. மிக நல்ல விஷயம்.
இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகப் பொருளாதாரம் - முதல்வர் பெருமிதம்.
அ. தி. மு. க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மினி லேப்டாப், அம்மா மினிகிளினிக் திட்டம் - எடப்படியார் வாக்குறுதி.
மக்கள் பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசைக் கட்டிக்கொள்கிறார்கள். பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயைக் கட்டிக்கொள்கிறார்கள் - சீமான் கடும் விமரிசனம். ஆஹா, அரசியலின் அறுசுவை அட்டகாசம்தான்.
ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டதற்கும் குண்டர் சட்டம் பிறப்பிக்கப் பட்டதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை சுட்டிக்காட்டி நீதிபதி குண்டர் சட்டத்தை இந்த வழக்கில் ரத்து செய்துள்ளார். இந்த ஒரு சிறு அம்சத்தைக் கூட பிராசிக்யூக்ஷன் தரப்பு கவனிக்க வில்லை போலும். வழக்கறிஞர் பணி சிற்பம் செதுக்குவது போன்ற மிக நுட்பமான பணி என்பதை இது காட்டுகிறது.
இந்தியப் பொருட்களின் மீது மொத்தமாக 50 சதவீதம் வரியை விதித்துள்ளார் ட்ரம்ப். 140 கோடி இந்திய மக்களின் மத்தியில் வினையை விதைத்து வருகிறார். விரைவில் வினை அறுப்பார்.
நைட் ஷிப்ட் பணி குறித்த கட்டுரை - இரவுப் பணி உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிவியல் தரவுகளுடன் விளக்கியிருந்த நேர்த்தி பாராட்டுக்கு உரியது. பயனுள்ளது. பெண்கள் என்றில்லை. இரவுப்பணி பொதுவாகவே எல்லோரையும் பாதிப்பதாகும். மேக்ரோகாசம் என்ற பிரபஞ்சத்தின் மறு பாதிப்புதான் மைக்ரோகாசம் என்னும் நமது உடல். இயற்கையை மீறி உடலை வருத்தும்போது விளைவுகள் மோசமாகவே இருக்கும். இது என் சுய அனுபவமும் கூட.
நொய்டாவில் சாமான்யர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ஒரு ட்ரில்லியன் கோடி ரூபாய் க்ரெடிட் ஆகியிருப்பது அந்த வங்கியின் பேங்கிங் I. T. சிஸ்டத்தின் கின்னஸ் சாதனை. மகா ஜோக்.
"நடிகனும் நாடாளலாம்" சிறுகதை நல்ல கருத்தோவியம். கதாசிரியர் பிரபாகருக்கு பாராட்டுக்கள்.
திருமதி. ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் நியூயார்க் பயணக் கதை மிக சுவையான வாசிப்பனுபவம். புண்ணியம் செய்தவர்கள் தான் இம்மாதிரி வெளிநாட்டு அனுபவங்களைப் பெற இயலும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் மேடம். உலகம் ஒரு சிறந்த புத்தகம். ஓரிடத்தில் மட்டுமே வாழ்பவன் அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறான் என்று எங்கோ படித்த ஞாபகம். நாகரிகமும், செல்வச்செழிப்பும், ஜனநாயக வீச்சும், இயற்கை அழகும், அறிவுப் புலங்களும் கொட்டிக்கிடக்கும் அந்த நாட்டுக்கு திருஷ்டிக் கழிப்பாக ஒரு குடியரசுத் தலைவரா என்னும் நினைப்பும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஈரோடு. க. ரவீந்திரன் அவர்களின் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவுகள் மிக அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள் சார். Government of the people, by the people and for the propple என்ற சொற்றொடர் லிங்கன் கெட்டிஸ்பர்க் உரையில் சொன்னது என்பதை அறிந்து
கொண்டேன். சிகாகோவில் சர்வ சமய மாநாடு 17 நாட்கள் நடந்தது என்பதும் அதில் 6 முறை விவேகானந்தர் அவர்கள் பேசினார் என்பதும் நான் புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி. மிக்க நன்றிகளும், பாராட்டுக்களும்.
உழைக்கும் கைகளே! உருவாக்கும் கைகளே! என்ற பிரபலமான திரைப்பாடலின் மெட்டில், உழைக்கும் பெண்களே! உருவாக்கும் பெண்களே! என்று கவி புனைந்துள்ளார் வே. கல்யாண் குமார் அவர்கள். மெட்டுக்கு சற்றும் பிசிறு தட்டாதபடி பெண்மையைப் போற்றும் வார்த்தைகளை தேர்வு செய்து பொருத்தியுள்ள திறமை தங்கத்தில் வைரத்தைப் பதிக்கும் நுட்பம் போல் இருக்கிறது. வாய்விட்டுப் பாடவைக்கும் லயம். பாராட்டுக்கள்.
திருமதி. சாந்தி ரெங்கநாதன் அவர்களின் முருகன் ஸ்துதி கவிதையல்ல அழகு தமிழ் கீர்த்தனை. ஒரே கவிதையில் ஆறுமுகக் கடவுளை அவர் - சீரலைச் செல்வா, சிற்பரனே, சிவகாமி செல்வா, ஆறுமுகா, வேலவா, குருநாதா - என்று ஆறு நாமங்கள் வருமாறு நல்ல தமிழில் கவி யாத்துள்ளது சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள்.
இன்னும் சொல்லவேண்டிய கருத்துக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இடம் போதாது.
அத்தனையும் தமிழ்நாடு இ இதழ் குழுமத்தாரின் அறிவுத்தானம். அவர்களுக்கு நன்றிகள் சொல்லி பூர்த்தி செய்கிறேன்.
நாளை சந்திப்போம்.
P. கணபதி
பாளையங்கோட்டை.