Print Date: Wednesday, 01 July 2026, 06:27 AM
Published On: 2026-06-26 21:49:45
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிக்கும் நோக்கோடும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகவும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு எடுத்து வரும் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி. நிறுவனம், பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் பெரும் முயற்சியால் உருவானது. மேலும், வெறும் லாபம் ஈட்டும் ஒரு வணிக நிறுவனம் மட்டுமல்ல; அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், தங்களின் வாழ்வாதார நிலங்களை வழங்கிய நலிவடைந்த விவசாயிகளின் தியாகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் சொத்தாகும். தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும், நாட்டின் மிக முக்கியமான நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி-யின் பங்குகளை, ‘பொதுத்துறை மறுசீரமைப்பு’ என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்ப்பது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, நிறுவனத்தையே தனியாருக்கு விற்க முயலக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, பொதுத்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். மக்களின் சொத்தான என்.எல்.சி-யைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகத் தொழிலாளர்களோடும், பொதுமக்களோடும் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!