Print Date: Thursday, 02 July 2026, 10:19 AM
Published On: 2026-06-26 21:33:47
மதுரை: இஸ்லாமுக்கு மதம் மாறியவருக்கு ‘முஸ்லிம் லெப்பாய்’ சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இஸ்லாமுக்கு மதம் மாறிய ஒருவருக்கு, பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் 'முஸ்லிம் லெப்பாய்' உள்ளிட்ட குறிப்பிட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ்களை வழங்க முடியாது என்றும், அதற்கு வழிவகுத்த தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், 2015-ஆம் ஆண்டு இஸ்லாமைத் தழுவி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். பின்னர் 'முஸ்லிம் லெப்பாய்' சமூகச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை வருவாய்த் துறையினர் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வு விசாரித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள், "ஒருவர் இஸ்லாமுக்கு மதம் மாறியவுடன் அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். லெப்பாய், ராவுத்தர், மரக்காயர், ஷேக், சையத் போன்ற குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு 09.03.2024 அன்று வெளியிட்ட அரசாணை, உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணானது. நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது. மதமாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைப் பெற முடியாது. லெப்பாய், ராவுத்தர் போன்ற சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாகியவை" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, மனுதாரருக்கு 'முஸ்லிம் லெப்பாய்' சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது. இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. மேலும், இந்த வழக்கிற்கு அடிப்படையாக இருந்த தமிழக அரசின் அரசாணையை செல்லாது" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.