Print Date: Wednesday, 01 July 2026, 08:58 AM
Published On: 2026-06-26 21:15:48
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், ஏழை விவசாயிகள் தங்கள் விவசாய நில மேம்பாட்டிற்காக அரசு அனுமதித்துள்ள இலவச வண்டல் மண்ணை ஏற்றிச் சென்றபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புகழ்வேந்திரன் என்ற நபர் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட விவசாயிகளையும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். "மாற்றத்திற்கான அரசியல்" மற்றும் "ஊழலற்ற நிர்வாகம்" என்று பேசி ஆட்சியில் அமர்ந்துள்ள விஜய் கட்சியின் உண்மை முகம், இச்சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு இச்சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே, உடனடியாக விவசாயிகளை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி மற்றும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீது காவல்துறை கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, ஏழை விவசாயிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் ஜோசப் விஜய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.