Print Date: Wednesday, 01 July 2026, 08:59 AM
Published On: 2026-06-26 21:07:49
இந்தியா - ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், இருதரப்புக் கூட்டுறவின் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற உள்ளது. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு சனாயே தகாயிச்சி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.