Print Date: Wednesday, 01 July 2026, 08:59 AM
Published On: 2026-06-26 20:53:50
புதுச்சேரி: "வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாடு முன்னேறும்போது, அந்த வளர்ச்சியில் நமது நாகரிகமும், நிறுவன நினைவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். எளிய மீனவ சமூகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் துணை நிற்கிறார்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய கலங்கரை விளக்கத்தை நேற்று (25.06.2026) திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் பேசியதாவது: "இந்தியா என்பது நீண்ட நினைவாற்றல் கொண்ட ஒரு நாகரிகம். அந்த நினைவுகளைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வது நமது பொறுப்பாகும். கடந்த காலத்தில் கொந்தளிப்பான வானிலை நிலவியபோது, கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கிக்கொண்டனர். அப்போது, பிஎஸ்என்எல் ஆதரவுடன் வெறும் 14-15 மணி நேரத்திற்குள் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. இது மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்ப உதவியதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கும் நிம்மதியை அளித்தது. சரியான நேரத்தில் வழங்கப்படும் வழிகாட்டுதலே மீனவர்களின் உண்மையான பாதுகாப்பாகும்." புதுச்சேரி என்பது தமிழ், பிரெஞ்சு, இந்திய, கடல்சார்ந்த மற்றும் உலகளாவிய தாக்கங்களின் சங்கமமாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இது தமிழ் வேர்கள் ஆழமாகப் பதிந்திருக்கும் பூமி என்றும், பிரெஞ்சு தாக்கத்தின் முத்திரை இங்கு தெளிவாகப் பதிந்துள்ளது என்றும் கூறினார். 1836 ஆம் ஆண்டு முதல் நிலைத்து நிற்கும் இந்தப் பழைய கலங்கரை விளக்கத்தை மீட்டெடுக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) எடுத்த முடிவு, அரசுத் துறைகள் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது என்றார். ஒரு காலத்தில் கடலின் ஆபத்துகளுக்கு மத்தியில் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் வழிகாட்டியது போல், இன்று நவீன பொருளாதாரத்தின் சிக்கல்களுக்கு மத்தியில் பொருளாதார நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு வழிகாட்டுகின்றன என்று நிதியமைச்சர் ஒப்பிட்டுக் பேசினார். அரசு நிறுவனங்கள் கடமை, விழிப்புணர்வு, சேவை, நிலைத்தன்மை ஆகிய விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்தக் கலங்கரை விளக்கம் நினைவூட்டுவதாக அவர் தெரிவித்தார். இந்தக் கலங்கரை விளக்கத்தின் பெருமையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட மத்திய பொதுப்பணித் துறை (CPWD) மற்றும் இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளைக்கு (INTACH) அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு. கைலாசநாதன், முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. செல்வகணபதி மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.