Print Date: Wednesday, 01 July 2026, 10:34 AM


Sports

என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை வறுத்தெடுத்த அமைச்சர்

Published On: 2026-06-26 20:49:51

News Image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது. விஜய் தலைமையில் புதிய அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகளும் இடம்பிடித்துள்ளது. இதில் அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் அமைச்சரவைக்கு மட்டுமல்ல எம்எல்ஏவிற்கே புதியவர்கள். இதே போல பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கீர்த்தனா, இதே போல ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவருமான ஜெகதீஸ்வரிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாவட்டத்திற்கும் சம விதிகம் வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் விருதுநகரில் விளையாட்டுத் துறை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அப்போது மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்ட பேனரில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரி பெயர் இடம்பிடித்தது. இதனை பார்த்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிருப்தி அடைந்தார். மேடையில் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது பொறுப்பு அமைச்சருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனையடுத்து தான் மற்ற அமைச்சர்களின் பெயர் இடம்பெற வேண்டும் என தனது கூறினார். உடனே மாவட்ட ஆட்சியர் விழா ஏற்பாடுகளை கவனித்து வந்த அதிகாரியை அழைத்து அமைச்சர் சொல்லும் புகாருக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேடையிலேயே அனைவர் முன்னிலையிலும் தனது பெயர் மேலே இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தான் ஆட்சியை பிடித்துள்ளார்கள். அதிலும் தன் பெயர் முன்னாடி வர வேண்டும் என மற்றொரு பெண் அமைச்சர் மீது உள்ள அதிருப்தியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் அதிருப்தியை தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.