Print Date: Wednesday, 01 July 2026, 10:32 AM
Published On: 2026-06-26 20:43:52
இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக அவரே பதிலளித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து மொத்தம் 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு அடுத்தமாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. திமுக சார்பில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்று தமிழ் நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். காரணம் இந்த தொகுதியில் வென்றால்தான் சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு பெரிய மருந்தாக இருக்கும். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் சட்டமன்றம் வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். இவர், இப்படி கூறியதால் திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தெரிகிறது. தற்போது, அதுதொடர்பாக அவரிடமே கேட்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திருச்சி கிழக்கில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், அந்தத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் பதிலளித்தார். இந்த வாரம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, ஒரு குட்டி கதை சொன்னார். அதில், ‘உங்க அப்பாவை காணோம்’ என்று வார்த்தையை குறிப்பிட்டார். இது மு.க.ஸ்டாலினையே குறிப்பிட்டு சொன்னார் என்று திமுக கடுமையாக அவரை விமர்சித்தது.விஜயின் இந்த பேச்சுக்கு கூட்டணி கட்சியினரே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் விஜயின் இந்த பேச்சுக்கு, மு.க.ஸ்டாலினும் பதிலளித்தார். “நான் எங்கும் போகவில்லை, சட்டமன்றத்திலேயேதான் இருக்கின்றேன். நான் அறிவித்த திட்டங்கள் மூலம் அங்குதான் இருக்கிறேன்” என்று கூறினார். முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் ஒட்டுமொத்த திமுகவே கோபத்தில் இருக்கும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது கிட்டத்தட்ட இறுதியாகிவிடும் என்றுதான் தெரிகிறது.