Print Date: Wednesday, 01 July 2026, 10:33 AM


Sports

மகளிர் டி20 உலகக்கோப்பை.. ஷஃபாலி உதவியால் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா

Published On: 2026-06-26 20:36:52

News Image

லண்டன்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில், வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் சேஸிங்கின் போது அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இப்போட்டியிலும் இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் தொடர்ந்தது. பவர்பிளே ஓவர்களிலேயே இந்திய வீராங்கனைகள் 4 எளிய கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர். குறிப்பாக, வங்கதேச தொடக்க வீராங்கனை ஜுவைரியா பெர்டோஸ் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்புகளை நந்தினி சர்மா, யாஸ்திகா பாட்டியா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் கோட்டைவிட்டனர். இதற்கிடையே, பெர்டோஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ராதா யாதவ் சிறப்பாக செயல்பட்டு 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா (32 ரன்கள்) மற்றும் சோபனா மோஸ்தரி (22 ரன்கள்) ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இத்தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய ரேணுகா தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். ஆட்டத்தின் இறுதி ஓவரை வீசிய ஸ்ரீ சரணி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 137 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அஸ்திவாரம் அமைத்தார். அவர் 29 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். யாஸ்திகா பாட்டியா 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காமல் நின்று 13 ரன் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது. இந்திய அணி தனது அடுத்த முக்கியமான லீக் போட்டியில் ஜூன் 28 அன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.