Print Date: Wednesday, 01 July 2026, 10:31 AM


Sports

IND vs IRE 1st T20: அபிஷேக் சர்மாவுக்கு டாடா பைபை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 என்ன?

Published On: 2026-06-26 20:34:52

News Image

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுள்ள இந்த ஆட்டத்தின் பிளேயிங் 11 குறித்த எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாவது குறித்தும், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா நீக்கப்படுவது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. பெல்ஃபாஸ்டில் இன்று நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி, இந்திய அணிக்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். டி20 உலகக் கோப்பையை வென்று தந்த சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. அவர் அறிமுகமானால், சஞ்சு சாம்சன் அல்லது உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். சமீபத்திய உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் விளையாடுவது உறுதி என்பதால், அபிஷேக் சர்மாவுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய அணியின் மற்ற பேட்டிங் வரிசையில், இஷான் கிஷன் 3வது இடத்திலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலும் விளையாட உள்ளனர். துணை கேப்டன் திலக் வர்மா 5வது இடத்திலும், அவர்களுக்குப் பின் சிவம் துபே மற்றும் அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆல்-ரவுண்டர்களாக களம் இறங்குவர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்ஷித் ராணா ஆகியோர் கூட்டணி அமைக்க உள்ளனர். குல்தீப் யாதவுக்குப் பதிலாக ரவி பிஷ்னோய் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக களம் காண்கிறார். காயத்தில் இருந்து இன்னும் மீளாத வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக பிரின்ஸ் யாதவும், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சூரியன்ஷ் ஷெட்கே-வும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11: வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல்/வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா.