Print Date: Wednesday, 01 July 2026, 02:20 PM


Sports

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Published On: 2026-06-26 19:35:58

News Image

ஹைதராபாத்: வங்கதேச மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துக் களமிறங்கியது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் மற்றும் ஜுவைரியா ஃபெர்டஸ் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் திலாரா அக்தர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஃபெர்டஸும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சோபனா மோஸ்டரி மற்றும் கேப்டன் நிகர் சுல்தானா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தியது. இதில் சோபனா மோஸ்டரி 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் நிகர் சுல்தானாவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோபிக்க தவறினர். இதன் காரணமாக, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். அதன்பின் 53 ரன்களை சேர்த்த கையோடு ஷஃபாலி வர்மாவும் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய யஷ்திகா பாட்டியா 23 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 10 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 13 ரன்களையும், தீப்தி சர்மா 5 ரன்களையும் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தங்களின் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா ஆட்ட நாயகி விருதை வென்றார்.