Print Date: Wednesday, 01 July 2026, 02:19 PM
Published On: 2026-06-26 19:32:59
கோயம்புத்தூர்: மனைவியுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து ஆற்றில் வீசிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார் - மகேஸ்வரி தம்பதி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆனந்தகுமார் வேலைக்கு எதுவும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சத்தம் போடுவது, அக்கம்பக்கத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை, மகன் ஆனந்தகுமாரையும், மருமகள் மகேஸ்வரியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதையடுத்து, இந்த தம்பதியர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கரவழி மாதாப்பூரில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 23-ம் தேதி கணவன் ஆனந்தகுமாரும், மனைவி மகேஸ்வரியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மனைவி மகேஸ்வரி கூடுதலாக மது வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. ஆனால், மனைவிக்கு கூடுதலாக மது கொடுக்க ஆனந்தகுமார் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், மதுவில் விஷம் கலந்து, மனைவிக்கு கொடுத்துள்ளார். இது தெரியாமல், அதை மகேஸ்வரி குடிக்கவே, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் பயந்து போன ஆனந்தகுமார், தனது தந்தை ஆறுமுகம், சித்தப்பா சுப்பிரமணிக்கு இதுபற்றி கூறி அழுதுள்ளார். இதையடுத்து அங்கு வந்த ஆறுமுகமும், சுப்பிரமணியும் மகேஸ்வரியின் சடலத்தை ஒரு பையில் மூட்டை கட்டி, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று நொய்யல் ஆற்றில் உடலை வீசி சென்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆனந்தகுமார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இரவு வந்துள்ளார். அப்போது மகேஸ்வரி இல்லாததை பார்த்து, அவர் இந்நேரத்தில் எங்கு சென்றுள்ளார் என ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதை கவனித்த உரிமையாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மகேஸ்வரி குறித்து ஆனந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்வரியை தான் கொலை செய்ததையும், தனது தந்தையும், சித்தப்பாவும் அவரது உடலை ஆற்றில் வீசியதையும் போலீசாரிடம் ஆனந்தகுமார் கூறினார். இதையடுத்து, ஆனந்தகுமாரையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை ஆறுமுகம், சித்தப்பா சுப்பிரமணி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட மகேஸ்வரியின் உடலையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.