Print Date: Wednesday, 01 July 2026, 02:21 PM
Published On: 2026-06-26 19:26:59
சென்னை: அதிமுக உடனான பிரச்சனைகளுக்கு பிறகு அதிக அளவில் மிரட்டல்கள் வருவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அந்த முயற்சியில் எனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்கு பிறகு, எனக்கும், எனது வீட்டுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக உடனான பிரச்னைக்கு பிறகு தற்போது எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருகின்றன. இதுதொடர்பாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இதுதொடர்பாக நான் அளித்த புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என சி.வி. சண்முகம் கோரியிருந்தார். இந்த மனுவானது, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி. சண்முகத்துக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், அந்த உத்தரவுக்கு இணங்க, தற்போதைய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது எனவும் நீதிபதி கேள்வியெழுப்பினார். அப்போது அரசு வழக்கறிஞர், இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை அறிந்து, வரும் திங்கட்கிழமை (ஜூன் 29) தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜூன் 29ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகிய இரண்டாம்கட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும், இவர்கள் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்தனர். பின்னர், எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி சமாதானமாகினர். சி.வி. சண்முகம் இப்போது வரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.