Print Date: Wednesday, 01 July 2026, 03:27 PM


Sports

“மிக நீண்ட இன்னிங்ஸ்”.. வாரணாசியில் திருமணம் செய்து கொண்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்!

Published On: 2026-06-26 19:11:00

News Image

வாரணாசி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், அக்சிதா ராஜ் என்பவரை வாரணாசியில் கரம்பிடித்து தனது வாழ்க்கையின் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மற்றும் அக்சிதா ராஜ் ஆகியோரது திருமணம் வரலாற்றுச் சிறப்புமிக்க வாரணாசி நகரில் நடைபெற்றது. இவர்களது திருமண கொண்டாட்டங்கள் ஆகாஷ் தீப்பின் சொந்த ஊரான பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் ஏற்கனவே தொடங்கின. இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங்கும் இந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மணமகள் அக்சிதா ராஜ், டெஹ்ரியில் உள்ள மணிக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆகாஷ் தீப், "எங்களது வாழ்க்கையின் மிக நீளமான மற்றும் மிக அழகான இன்னிங்ஸை ஒன்றாக விளையாடத் தயாராகிவிட்டோம். இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்போது, எனது துணையாக நீ இருக்கும் ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாக அமையும்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு ஆகாஷ் தீப்பின் தாயாரும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ராஞ்சியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப், தனது அசாத்திய பந்துவீச்சால் இங்கிலாந்தின் முன்னணி 3 பேட்ஸ்மேன்களான பென் டக்கெட், ஆலி போப் மற்றும் ஜாக் க்ராலி ஆகியோரை வெறும் 10 ரன்களுக்குள் வீழ்த்தி அசத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் கடைசியாக இந்திய அணியில் விளையாடினார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டியிருந்த ஆகாஷ் தீப், முதுகுவலி காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலக வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.