Print Date: Wednesday, 01 July 2026, 04:53 PM
Published On: 2026-06-26 18:48:02
சேலம்: ஓமலூர் அருகே பட்டப்பகலில் சித்த மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து, 26 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய ராகவன் (45). சித்த மருத்துவரான இவர், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி சின்ன திருப்பதி கோயில் அர்ச்சகராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களது மகள் மற்றும் மகன், சேலம் மன்னார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆகையால், விஜய ராகவனின் குடும்பத்தினர் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அதே நேரத்தில், விஜயராகவன் தாராபுரத்திலேயே தனியாக தங்கி, மருத்துவம் மற்றும் கோயில் பணி உள்ளிட்டவற்றை கவனித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூன் 25) காலை மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சேலம் மன்னார்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு விஜயராகவன் புறப்பட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த 3 பீரோக்களையும் உடைத்து, அதில் இருந்த 26 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை களவாடி சென்றுள்ளனர். அத்துடன், வைர கற்கள் பதித்த நெக்லஸையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதை அறியாத விஜயராகவன், மிகவும் ரிலாக்ஸாக வீடு திரும்பி உள்ளார். அப்போது தான் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்து போன விஜய ராகவன், உடனடியாக திருட்டு நிகழ்வு குறித்து, ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.